October 25, 2025
கட்டுரைகள்

ஆணாதிக்க வெறியன் – கமலின் பெண்கள் தினப் பேச்சும் விமர்சனமும்

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்ட்து.

மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கமல்ஹாசன் பேசுகையில்,

எனக்கு பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். தாய் சொல்லைத் தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் பெண்களை மதிப்பதற்கான ஆரம்பப் பாடம் எனக்கு நினைவு தெரிந்த வயதிலேயே தொடங்கி விட்டது. என் வீட்டின் குடும்பத் தலைவர் என் தாய். அவரிடம் கேட்காமல் எந்த பெருமுடிவையும் எனது தந்தை எடுக்கமாட்டார். அதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அன்பு, காதல் என்னுள் தொடருகிறது என்றார்.

மேலும் பேசுகையில் என்னை என்னென்ன கேலி செய்வார்கள் என்று தெரியும். இதற்கெல்லாம் அவர்கள் ஆளாகி உள்ளார்கள் என்று அவர்களுக்கும் புரியும். மய்யம் எனும் பெயருக்கே கேலி. எல்லாத்துக்கும் மய்யத்திலேயே இருப்பீர்களா? என்றார்கள். மய்யத்தில் இருந்து அனைத்தையும் பார்ப்போம். அப்போது தான் நீதியும் நியாயமும் கிடைக்கும். அந்த மய்யத்தில் ஒரு கேலியும், அவமானமும் இல்லை. அங்கு தான் நிற்பேன். பெண்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? என்கிறார்கள். எனக்குப் புரிந்து கொள்ளத் தெரியும். நான் புடவை கட்டியிருக்கிறேன்.

கொஞ்சமாக வளர்ந்திருக்கும் எனது மீசையை முறுக்கிச் சொல்வேன் எனக்குப் புடவை கட்டத் தெரியும். இதில் அவமானம் இல்லையே.? பள்ளியில் இருந்து சக மாணவன் அடித்தபோது, வீட்டுக்கு வந்து கட்டிப்பிடித்து அழுதது ஒரு பெண்மணியைத் தான். சரி திருப்பி அடிக்காதே… என்று வீரத்தின் உச்சகட்டமே அகிம்சை தான் என்று சொல்லாமல் சொல்லிக்கொடுத்தது என்னுடைய தாய், இங்கு பல கண்களில் தெரிகிறார் என்றார்.

கமலின் இந்தப்பேச்சுக்குக் கடுமையான எதிர்வினைகள் வருகின்றன.
சமூகச் செயற்பாட்டாளர் நலங்கிள்ளி, இதுபற்றி எழுதியிருப்பதாவது…

காதல் இளவரசன் கமல் நேற்று மகளிர் நாள் விழாவில் உரை. அரசியல் கட்சி ஆரம்பிச்சாச்சு. பிறகு பெண் விடுதலை பற்றி எல்லாம் பொளந்து கட்ட வேண்டாமா?

கமலுக்குப் புடவை கட்டிக் கொள்ளத் தெரியுமாம். அதுவும் மீசையை முறுக்கிச் சொல்வாராம். சாதாரண சாதனையா இது? ஐரோப்பியப் பெண்ணியர்கள் டேல் ஸ்பென்டர், வர்ஜினியா உல்ஃப் உள்ளிட்ட புடவை கட்டத் தெரியாத பெண்கள் எப்படித்தான் பெண் விடுதலை பற்றி எல்லாம் பேசினார்களோ தெரியவில்லை.

கமல் புடவை கட்டி வந்த அவ்வை சண்முகி படத்தில்தான் அடங்காப் பிடாரி மனைவியை அடக்க ஒடுக்கமான பெண்ணாகத் திருத்திக் காட்டுவார். ஷேக்ஸ்பியர் எழுதிய அடங்காப்பிடரியை அடக்குதல் நாடகம் முதல் அறிவாளி, மன்னன் படம் வரை எல்லாம் அவ்வை சண்முகி கதைதான்.

புடவை கட்டிக் கொண்டேன், எனவே நான் பெண்களை மதிப்பவன் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் கமல் அவர் திரைப்படங்களில் செஞ்ச ஈவ் டீசிங் கொஞ்சமா? நஞ்சமா?

விக்ரம் படத்தில் நாயகி கமலிடம் ஆணும் பெண்ணும் சமம் என்பார். நான் மேல சட்டை இல்லாம போவேன், நீ போவியா எனக் கேட்பார். ஆகா, என்ன ஒரு வாதம். இதற்கு வசனம் எழுதியவர் சுஜாதா.

முட்டையிடும் பெட்டைகளா முட்டுவது, பட்டணத்துப் பெண்களின் லட்சணத்தைக் கண்டா பயப்படாம மஞ்சத்தாலி கட்டுறவன் உண்டா என பெண்களின் உயர்வை என்னமாய்ப் பாடுகிறார். இதுவும் அடங்காப்பிடாரி பெண்ணை அடக்குகிற படந்தான் – சகலகலா வல்லவன்.

இப்படி சினிமாவுல பெண்களை
கேவலப்படுத்தும் வேலையை எல்லாம் செஞ்சு முடிச்ச ஆணாதிக்க வெறியன் மகளிர் தினத்தில் பெண்களுக்கு அறிவுரை சொல்ல வருவதற்கு என்ன ஒரு துணிச்சல் வேண்டும்.

கமலே, நீங்க புடவை கட்டுனால்லாம் பெண்ணுரிமையைப் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சமாவது உங்களுக்கு முதலில் பெண்கள் படும் துன்பங்கள் மேல் கரிசனம் வேண்டும். புடவை கட்டியிருக்கும் பெண்ணின் நெஞ்சில் புதைந்து அழுந்தியுள்ள தன்மான உணர்வு பற்றி கொஞ்சமாவது அக்கறை வேண்டும்.

இப்படி பெண்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அவர்களை இழிவுபடுத்தும் வேலை ஒன்றை மட்டுமே செய்த ஒரு ஆணாதிக்க வெறியன் பேச்சைக் கேட்பதற்கு சென்னை ஒய்எம்சிஏ திடலில் கூடியிருந்த இவ்வளவு பெண்களைப் பார்க்கையில்தான் நெஞ்சம் பதைபதைக்கிறது.

கமல் படங்களில் செய்த பெண் சீண்டல்களைக் கண்ட எந்தத் தன்மானப் பெண்ணும் அவருக்கு ஓட்டு போட மாட்டாள், செருப்பால் நாலு போடுவாள்!

Related Posts