செய்திக் குறிப்புகள்

கமல் உடல்நிலை – அவர் மகள்கள் ஸ்ருதியும் அக்‌ஷராவும் வெளியிட்ட செய்தி

நேற்று முன் தினம் (சனவரி 17) கமல் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்…

மக்கள்நீதிமய்யம் சார்பில் முதல்கட்டத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், எனது காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதுவரை ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், அதை மீறியே சினிமா பணிகளையும், அரசியல் பணிகளையும் மேற்கொண்டேன். பிரசாரம் தொடங்கும்போதே எனது காலில் அதிக வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. எனவே, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் என் பணிகளை புதிய உத்வேகத்துடன் தொடங்குவேன். மக்களை நேரில் சந்திக்க முடியாது. இந்த மருத்துவ விடுப்பில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், வீடியோ வாயிலாகவும் உங்களுடன் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ( சனவரி 19) காலை கமல் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா ஆகிய இருவரும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

இன்று காலையில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் திரு.ஜே.எஸ்.என்.மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு. மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.

அப்பாவை மருத்துவர்களும் மருத்துவப்பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள்.நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார்.சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார்.

அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Related Posts