October 25, 2025
கட்டுரைகள்

சினிமாவில் சாதியம் ஆரோக்கியமா? ஆபத்தா?

வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார்.

இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே புரிந்துகொள்ளப்பட்டதா என்றால்? இல்லை.

தோட்டக்காரரின் உருவத்தையும் மீசையையும் வைத்து அவரை ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர் என்றும் பழம் தின்ற சிறுவன் இன்னொரு சாதியைச் சேர்ந்தவன் என்றும் யார் வீட்டுத் தோட்டம்? என்கிற சொல்லின் பொருள் சாதிப்பெருமையைப் பேசுவதாக இருந்தது என்றும் புரிந்து கொள்ளப்பட்டது.

அது சிறுவனின் சாதியைச் சேர்ந்தோர் கை தட்டி வரவேற்பதும் தோட்டக்காரரின் சாதியைச் சார்ந்தவர்களில் ஒருசிலர் தலைகுனிவதும் மற்றோர் கோபம் கொள்வதும் நடக்கிறது.

வாழை படம் மட்டுமன்று மாரிசெல்வராஜின் முந்தைய படங்கள்,பா.இரஞ்சித்தின் முந்தைய படங்கள், அண்மைக்காலத்தில் வெளியான ப்ளுஸ்டார், தங்கலான், லப்பர்பந்து, நந்தன் உட்பட பல படங்களில் இதுபோன்ற பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் வெளியான நந்தன் படத்தில், இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட தனித்தொகுதிகள் அத்தொகுதிகளில் வெற்றிபெறும் தலைவர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

அப்படத்தைப் பார்த்த பல ஊராட்சித்தலைவர்கள், இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்தும் உண்மை.நாங்கள் படத்தில் வரும் சசிகுமாரைப் போல அனுதினமும் நிஜத்தில் கஷ்டங்களைச் சந்தித்துவருகிறோம்.அரசியல் ரீதியாக எங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் அரசாங்க அதிகாரிகளும் நாங்கள் கொடுக்கும் விண்ணப்பங்களைக் கிடப்பில் போட்டு வைத்துவிடுகிறார்கள். எங்களிடம் மனு கொடுக்கும் மக்கள், இவர்களிடம் கொடுத்து எந்தப் பலனும் இல்லை இவர்கள் சரியாக வேலை செய்வது இல்லை என்று எங்களையே குற்றம் சொல்லும் நிலைதான் நீடித்துவருகிறது.

அவர்களிடம் நாங்கள் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லமுடியாது. நான் இந்த சாதிக்காரர் என்பதால் அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை அதிகாரிகளும் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால், உனக்கு எதுக்கு இந்த வேலை விட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? என்று சொல்வார்கள்.

அதனால் இவற்றை வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்.நாங்கள் சொல்ல முடியாததை இந்தப்படம் சொல்லிவிட்டது என்று புகழ்கிறார்கள்.

இன்னொருபக்கம்,எங்கள் வயிற்றுப்பாட்டுக்கு நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும், எல்லாச் சாதிகளிலும் பணக்காரர்கள் கொஞ்சம்பேர் இருப்பார்கள்.அவர்கள் தம் சொந்தச் சாதிக்காரர்களுக்கு, சாதிக்காரர்கள் என்பதற்காக எந்த வகையிலும் உதவி செய்யமாட்டார்கள்.பணக்காரர்களில் சாதி வேறுபாடு கிடையாது எல்லாப் பணக்காரர்களும் ஒரேமாதிரி தான் இருப்பார்கள்.அந்த இயக்குநர்களின் சாதியைச் சேர்ந்தவர்களும் அப்படித்தான்.

உண்மை அப்படித்தான் இருக்கிறது.நாங்களும் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம்.எங்கள் வாழ்க்கையை ஓட்டவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள்தான் அவர்களை நசுக்கினோம் பிதுக்கினோம் என்றெல்லாம் படமாக எடுத்து புகார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.எனவே,அவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று ஒதுங்கிக் கொள்கிறோம்.

முன்பெல்லாம் சினிமாவுக்கு போவது என்பது ஒரு சந்தோசமான நிகழ்வாக இருந்தது.இப்போது யார் படம்? என்ன கதை? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் தியேட்டருக்கு போக வேண்டியிருக்கிறது.

வீட்டிலும் ஊரிலும் இருக்கும் சிக்கல்களை மறந்து கொஞ்சம் பொழுதைப் போக்கலாம் என்று போனால் அங்கேயும் அதுவே படமாக எடுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவுத்துபோட்டுகிட்டு ஆடுச்சாம் என்கிற மாதிரி படமெடுக்கிறார்கள். இதனால் சினிமாவுக்குப் போகிற ஆசையே விட்டுவிட்டது என்கிறார்கள்.

திரைப்பட இரசிகர்கள் இந்தமாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.சில திரையரங்கு உரிமையாளர்களோ, இம்மாதிரி படங்களை எங்கள் திரையரங்குகளில் திரையிட்டால் படம் ஓடும் போது ஏதாவது பிரச்சினை அடிதடி வந்துவிடுமோ என்கிற பயத்துடனேயே இருக்க வேண்டியிருக்கிறது.அதனால் இம்மாதிரிப் படங்களைத் திரையிடுவதைத் தவிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம்,திரையுலகத்துக்குள்ளேயே,ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசுகின்றோம் என்று இந்த இயக்குநர்கள் சொல்கிறார்கள். இவற்றிற்கு எதிர்வினை என்று இயக்குநர் மோகன் ஜி, இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் படங்கள் வருகின்றன என்போரும் உண்டு.

இது கொள்கை ரீதியான விவாதம்.

இன்னொரு பக்கம், திரையரங்கு என்பது பொழுதுபோக்குக்கூடம். அங்கு வருகிற மக்கள் அன்றாட வாழ்வில் இருக்கும் கவலைகளை மறந்திருக்கவும் தங்கள் இரசனைகளை உரசிப்பார்த்துக் கொள்ளவும் வருகிற இடம்.இங்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்? அவர் பணக்காரரா? ஏழையா? தமிழ்நாட்டுக்காரரா? வெளிநாட்டுக்காரரா? என்பது உட்பட எதுவும் தெரியாது.வெளித்தோற்றங்களில் தெரியும் வெறுபாடுகளைக் கணக்கிலே கொள்ளாமல் நல்ல காட்சிகளுக்குக் கைதட்டி இரசிப்பதும் சிரிப்புக்காட்சிகளுக்கு வாய்விட்டுச் சிரிப்பதும் சோகக் காட்சிகளின்போது பிறர் அறியாமல் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொள்வதும்தான் இதுவரை நடந்த நிகழ்வுகள்.

ஆனால்,இதுபோன்ற படங்கள் வரத் தொடங்கிய பின்பு திரையரங்குகளில் இந்த இயல்புநிலை இல்லாமல் போய்விட்டது.

உள்ளே நுழையும்போதே உள்ளுக்குள் ஓர் அச்சத்துடன் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.படத்தில் என்ன மாதிரி இருக்குமோ? என்கிற அச்சத்துடனே நுழையவேண்டியிருக்கிறது என்று சொல்வோரும் உண்டு.

அதேநேரம் இந்தப்படங்களை இயக்கும் இயக்குநர்கள், ஒரு படைப்பாளியாக நாங்கள் உருவாவதற்கு முன்பு இந்த வாழ்க்கையில்தான் இருந்தோம்.எங்கள் அனுபவங்களை நாங்கள் படமாக எடுப்பது தவறா? என்று சொல்கிறார்கள்.

அதேநேரம் கலை இலக்கியம் படைப்போர் சமுதாய அக்கறையுடன் இருக்கவேண்டும்.நாம் எம்மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம்.இந்தச் சமுதாயம் இந்த நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது இதற்கு இதுதான் மருத்துவம் என்று அவர் உணர்வாரேயானால் உடனே அவர் செய்யவேண்டிய காரியம், அந்தச் சிகிச்சையை அந்த உடல் தாங்குமா? அந்த உடலில் வேறு எதேனும் சிக்கல்கள் இருக்கின்றனவா? என்று ஆராய்வதுதான்.

ஒருவருக்கு அறுவைசிகிச்சை தேவையெனில் அவருக்குத் தேவையான அளவு குருதி இருக்கிறதா? நீரிழிவு,இரத்த அழுத்தம் போன்ற குறைப்பாடுகள் இருக்கின்றனவா? என்றாய்ந்து அவை இருந்தால் அவற்றை முதலில் சரிசெய்துவிட்டு அதன்பின் தான் அறுவை சிகிச்சைக்குப் போவார்.

அப்படித்தான் இந்த படைப்பாளிகளும் படைப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்வோரும் உண்டு.

படைப்பாளிகள் என்போர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பருந்துப் பார்வையில் பார்க்கிறவர்கள்.அதிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் கலைப்படைப்பாக்குவது என்று சிந்திப்பவர்கள். இவர்களின் சிந்தனைக்குக் கடிவாளம் போடமுடியுமா?

அதேபோல் கடலுக்கு மீன் பிடிக்கப் போகிறவர் இந்த வகை மீன்களை இவர்கள்தாம் பிடிக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க முடியுமா? என்பதுபோல இந்த இயக்குநர் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று சொல்லவியலுமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

இந்த வாதப் பிரதி வாதங்களைக் கேட்டு நீதி சொல்ல யார் இருக்கிறார்கள். இங்கு எல்லோருமே ஏதாவது ஒரு தரப்பில் இருக்கிறார்கள்.அல்லது அப்படிப் பார்க்கப்படுகிறார்கள்.

ஓர் ஆறு தனக்கான பாதையைத் தாமே தீர்மானித்துக் கொள்வது போல இந்தச் சிக்கல் தனக்கான தீர்வைத் தானே தேடிக்கொண்டால்தான் உண்டு.

– கதிரோன்

Related Posts