ஃபைட் கிளப் – திரைப்பட விமர்சனம்

மீண்டும் ஒரு வடசென்னைப்படம். நல்லதற்கும் கெட்டதற்கும் சமவாய்ப்புகள் உள்ள வாழ்நிலம். வளரும் தலைமுறை அடிதடி, போதை ஆகியனவற்றிற்கு ஆட்பட்டுவிடாமல் விளையாட்டு, வேலைவாய்ப்பு என்று மாற்ற நினைக்கிறார் ஒருவர். அவர் சிந்தனையில் ஈர்க்கப்படுகிறார் நாயகன்.இருவரும் விரும்பியபடி நடந்ததா? இல்லையா? என்ன நடக்கிறது? என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்கும் படம் ஃபைட்கிளப்.
நாயகனாக நடித்திருக்கும் உறியடி விஜயகுமாருக்கு,அன்பு, ஆக்ரோசம், தவிப்பு, துடிப்பு எனப்பல்வேறு வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம். ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்காகக் கடுமையாகத் தயாராகியிருக்கிறார்.கட்டுக்கோப்பான உடல், துடிப்பான உடல்மொழி ஆகியன அவருக்குப் பலம். சண்டைக்காட்சிகளில் பொறிபறக்கிறது.காதல்காட்சிகளில் கனிந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மோனிஷாமோகன் பாலைவனச்சோலை.எளிய அழகு. சண்டைகளுக்கு நடுவில் அவர் வரும் காட்சிகள் ஆறுதல் தருகின்றன.
அவினாஷ் ரகுதேவன் மற்றும் சங்கர்தாஸ் ஆகியோர் நட்புக்கும் இரண்டகத்துக்குமான எடுத்துக்காட்டுகள்.கதையின் மையமாக இருக்கும் இவ்விருவரும் நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அடுத்த தலைமுறை நல்லமுறையில் வளரவேண்டும் என வழிகாட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்திகேயன் சந்தானம்.குத்துச்சண்டை வீரர் எனும் பாத்திரத்துக்கேற்ப அவருடைய தோற்றமும் நடிப்பும் அமைந்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க சண்டைப்படம். இதில் திறமையைக் காட்ட சண்டைக்காட்சிகளை விதவிதமான கோணங்களில் படமாக்க வேண்டும் என்கிற முடிவோடு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரிட்டோ.அவருடைய எண்ணம் இரசிகர்களுக்கு வியப்பும் விருந்துமாக அமைந்திருக்கிறது.
கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் சுகம்.பின்னணி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு. இளையராஜாவைக் கவசமாகக் கொள்ளும் உத்தி இந்தப்படத்திலும் அவருக்குக் கைகொடுத்து நற்பெயரைப் பெற்றுத்தருகிறது.
விக்கி, அம்ரின்அபுபக்கர் ஆகிய இரண்டு சண்டைப்பயிற்சி இயக்குநர்களும் படத்தின் பெரும்பகுதியில் நிறைந்திருக்கிறார்கள்.
எடுத்துக்கொண்ட கதைக்களம், கதைமாந்தர்கள் ஆகியனவற்றைக் காலங்காலமாகப் புழங்கிவரும் பொதுப்புத்தியின் அடிப்படையில் அணுகியிருக்கிறார் இயக்குநர் அப்பாஸ் ஏ.ரகமத்.நவநாகரிக யுகத்தில் அங்கு நடந்திருக்கும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பது குறை. அதேசமயம் எடுத்துக்கொண்ட விசயத்தை நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார் என்பது நிறை.
காலந்தோறும் நல்லவைகளும் கெட்டவைகளும் தொடர்ந்து பயணிக்கும்.அவற்றிற்கான அல்லது அவர்களுக்கான பெயர்கள் மாறலாம் குணங்கள் மாறாது எனும் உண்மையை நெற்றிப்பொட்டிலடித்தாற்போல் சொல்ல முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
– தனா