February 18, 2026
விமர்சனம்

ட்ரீம் கேர்ள் – திரைப்பட விமர்சனம்

விதவிதமான காதல்கதைகளை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.அவற்றிலிருந்து வேறுபட்ட சிந்தனையில் உருவாகியிருக்கும் படம் ட்ரீம் கேர்ள்.

கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்று கனவு.ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் இவர்கள் காதலர்களாகிறார்கள்.இவர்களுடைய காதலுக்கு ஒரு தடையும் வருகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் படம்.

நாயகனாக நடித்திருக்கும் ஜீவா,திரைப்படக் கனவோடு திரியும் இளைஞர்களின் பிரதிநிதியாகவே தோன்றியிருக்கிறார்.அப்படி இருப்பவர்கள் பெரும்பாலும் சோகமாக இருப்பார்கள்.இவருடைய கதாபாத்திரமோ வாழ்வின் போக்கில் கிடைக்கும் மகிழ்ச்சியை விடாமல் பற்றித் திளைக்கும் எண்ணமுள்ளவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தக்க நடித்து நற்பெயர் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா,பிரபல சண்டைநடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகள் என்கிற அடையாள அட்டைகளைக் கொண்டவர்.அதனாலோ என்னவோ? முதல்பட நடிகை என்பது தெரியாமல் பாத்திரத்துக்குப் பொருந்தியிருக்கிறார்.

பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகிய மற்ற நடிகர் நடிகையரும் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

குளுமையான கதைக்களம் என்பதும் படப்பிடிப்பு நடந்த இடம் ஊட்டி என்பதும்,ஓர் ஒளிப்பதிவாளருக்கு அல்வா சாப்பிடுவதுபோல் அழகான வாய்ப்பு.அதை உணர்ந்து உழைத்து காட்சிகளை மனம்திறந்து இரசிக்க வைத்திருக்கிறார் சாலமன் போவாஸ்.

காதல்கதைகளில் பாடல்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஒரேபாடல் வைத்திருக்கிறார்கள்.அந்த ஒருபாடலிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் இளமாறன்.பின்னணி இசை இதமோ இதம்.

படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமத்,கதையில் இருக்கும் இனிமை காட்சிகளிலும் இடம்பெறும் வகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார்.

ஹேமந்த் செல்வராஜ்,ராம் சரசுராம்,எம்.டி.தமிழரசன் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.காட்சிகளோடு கலந்திருக்கின்றன வசனங்கள்.

எம்.டி.தமிழரசன்,கிருத்திகா தாஸ் ஆகியோர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.முற்றிலும் மாறுபட்ட வில்லனை அவர்கள் கையாண்டிருக்கும் விதம் நன்று.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஆர்.பாரதி.திகட்டத் திகட்ட ஒரு முழுமையான காதல்கதையைக் கொடுக்கவேண்டும் அதில் எவ்வித வியாபார சமரசங்களும் கலந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருந்திருக்கிறார்.தற்கால இளையதலைமுறையினரை,அவர்களுடைய எண்ணங்களை அப்படியே ஏற்று அவர் வடிவமைத்திருக்கும் கதாபாத்திரங்கள் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன.

பல கனவுகள் இணைந்து உருவாகியிருக்கும் இந்தக் கனவுப்பெண் பேரழகி.

– இளையவன்

Related Posts