தேசிங்கு ராஜா 2 – திரைப்பட விமர்சனம்
கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என்பதால் ஒரு மோசமான காவலதிகாரி அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்கிற எல்லைக்கோட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2.
குற்றவாளிகளுக்கு ஆதரவு,அளவற்ற கையூட்டு வாங்குவது எனச் சுற்றிக் கொண்டிருக்கும் காவல்துறை ஆய்வாளர் விமல்.ஓர் அமைச்சர் மகனைப் பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு வருகிறது.அந்தப் பாதுகாப்பைத் தாண்டி கொலை நடக்கிறது.அது எதனால்? ஏன்? அதில் விமலுக்குப் பங்கு இருக்கிறதா? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகள் தாம் படம்.
காவல்துறை அதிகாரிக்குரிய எந்த இலக்கணமும் இல்லாத வேடம்,தோற்றம் ஆகியனவற்றோடு இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் நடித்திருக்கிறார் விமல்.
நாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.பாடல்கள் இல்லையெனில் அவர்களுக்குப் பெரிய வேலை இல்லை என்று சொல்கிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கின்றன.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனாவுக்கு ஆடல்,பாடல்,சண்டை என எல்லா விசயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.அவற்றில் குறை வைக்காமல் நிறைவாக இருக்கிறார்.
சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் படத்தில் இருக்கிறது.ஆனால் நகைச்சுவையைத் தேடி எடுக்க வேண்டியிருப்பதுதான் சோகம்.
இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை.பின்னணி இசையும் சுமார் இரகம்தான்.
ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர், காட்சிகளிலும் சிரிப்பு வரவழைக்க வேண்டுமெனப் பாடுபட்டிருப்பது புரிகிறது.
படத்தொகுப்பாளர் ஆனந்த் லிங்ககுமார்,எடுத்த காட்சிகள் எல்லாவற்றையும் பார்த்தவர் என்பதால் அவரைக் குற்றம் சொல்லாமல் விட்டுவிடலாம்.
இயக்குநர் எழில், தனக்கென ஒரு தனி மரியாதையைப் பெற்றிருப்பவர்.அவருடைய படங்களில் பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைக்கும்.திரைக்கதை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.இப்படத்தில் அவை எல்லாமே நிறைவாக இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.
ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்துக்கான எல்லாமே படத்தில் இருக்கிறது அவை எல்லாமே எங்கேயோ மிஸ் ஆகிவிட்டதுதான் சிக்கல்.
– இளையவன்.











