பன் பட்டர் ஜாம் – திரைப்பட விமர்சனம்
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்பதெல்லாம் அந்தக் காலம்.இக்கால இளம்தலைமுறை காதலைப் பார்க்கும் பார்வையும் அணுகும் விதமும் முற்றிலும் மாறுபட்டது என்பதை வெவ்வேறு விதங்களில் சொல்ல முனைந்திருக்கும் படம் பன் பட்டர் ஜாம்.
இப்படத்தின் நாயகன் கல்லூரி மாணவன்,சக மாணவியை காதலிக்கிறார்.நாயகனின் நண்பர் மைக்கேல் இவர்கள் உறவுக்குள் வருகிறார்.இன்னொரு பக்கம்,நாயகனுக்கு அவருடைய அம்மா சரண்யாபொன்வண்ணன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க முயல்கிறார்.அந்தப் பெண்ணுக்கு ஒரு காதலன் இருக்கிறார்.இவற்றில் என்ன நடக்கிறது? நாயகனின் காதல் என்னவானது? என்பதைத்தான் இளமைத் துள்ளலோடு சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ராஜு, காதல் காட்சிகளில் மட்டுமின்றி நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.திரைக்கதைப் போக்கில் அவருக்கு ஏற்படும் நிலை வருத்தத்துக்குரியது.
நாயகி பவ்யா ட்ரிகா,அழகிலும் நடிப்பிலும் ஈர்க்கிறார்.அவருடைய நடன அசைவுகளும் இரசிக்க வைக்கின்றன.முக்கியமான நேரத்தில் முடிவெடுக்கும்போது நடிப்பிலும் தேர்ந்திருக்கிறார்.
இன்னொரு இணையராக நடித்திருக்கும் விஜே பப்பு மற்றும் ஆதியா ஆகியோரும் நன்று.விஜே பப்பு தன் பங்குக்குச் சிரிக்க வைக்கிறார்.ஆதியா சுறுசுறுப்பு துறுதுறுப்பு மூலம் கவர்கிறார்.
முக்கிய வேடத்தில் வரும் மைக்கேல்,இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். திரைக்கதைக்கேற்ப சரியாக நடித்துமிருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி ஆகியோர் ஒருசேர இரசிக்கவும் சலிக்கவும் வைத்துவிடுகிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் வரும் விக்ராந்த் சிறப்பு.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் இரசித்துக் கேட்க வைக்கின்றன.பின்னணி இசையில் இளமை துள்ளுகிறது.அது இரசிகர்களுக்கு மகிழ்வூட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் பாபு,வண்ணமயமாகக் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.நாயகிகளின் அழகை அப்படியே வெளிப்படுத்தி இளைஞர்களை ஈர்க்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தாத்.இளைய தலைமுறையின் வாழ்க்கையை ஒளிந்திருந்து பார்த்தது போலக் காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்திருக்கிறார்.பாதுகாப்புக்கு இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் சில காட்சிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் மூத்தோர் பார்த்து முடித்த விசயங்கள் என்றாலும் இரண்டாயிரத்து இளைஞர்களை ஈர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு படம் எடுத்திருக்கிறார். அந்தவகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
– இளையவன்













