ஏழு பேர் கதை எழுதி ஐந்து மொழிகளில் வெளியாகும் படம்
*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின்
இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம்
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’.
கன்னடம்,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்.
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு
பழமையான வெகுதூரத்துக் கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும்
தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.
இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம்
படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) எனும் குழு.
இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின்
(இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன்
(பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது.
ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி,
பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருவாக்கி, அதை வெற்றிப்படங்களாக
உயர்த்துவதில் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன்
இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான
வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து
எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன்,
ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள். ரக்ஷித்துக்கு
ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக நடித்திருக்கிறார்.
முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத்
குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி
ஸ்ரீவஸ்தவா சிறப்பாக நடித்துள்ளனர்.
கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும்,
பிரம்ம்மண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம்
கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் என்கிறார்கள்.
இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க,
இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம் ஆர் ராஜாகிருஷ்ணன்
இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார்.
இயக்குநர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்பு
காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்படச் செயலாற்றி இருக்கிறார்.
இப்படம், ஐந்து மொழிகளில் உலகெங்கும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கும் திட்டம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.











