தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கும் படத்தில் அஜீத் நடிப்பதா? – ரசிகர்கள் எதிர்ப்பு
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் மொழிமாற்று இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் அஜீத் நடிப்பதை விமர்சித்து எழுதப்பட்டுள்ள பதிவொன்று முகநூலில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில்…..
நடிகர் அஜித்குமாருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
நடிகர் அஜித்குமார் தற்போது பிங்க் என்ற இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்தியில் இத்திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
தமிழில் அந்த வேடத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். இந்தி மொழியில் இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் திரைப்படங்கள் வெளிவருவது சகஜமாகி விட்டது.
ஆனால் தமிழிலும் அதுபோல் சில திரைப்படங்கள் வருவது தான் வேதனையாக உள்ளது. அதில் ஒன்றுதான் நடிகர் அஜித்குமார் நடிக்கும் இத்திரைப்படம்.
இந்தியில் இத்திரைப்படத்தின் கதையை கேட்ட அஜித் ரசிகர்களில் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் நாங்களும் அடக்கம்.
இத்திரைப்படம் தமிழில் வந்தால் தமிழ் கலாச்சாரத்தை அடியோடு அழித்துவிடும். தமிழுக்கென்று தனி சிறப்பும், நாகரிகமும், சுயமரியாதையும் உள்ளது. தமிழ் கலாச்சாரம் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தை பல உலக நாடுகள் பாராட்டுகின்றன. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதற்கு காரணம் அதன் கலாச்சாரமே.
மேற்கத்திய கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டில் பரவுவதற்கு சினிமாவே மிக முக்கிய காரணம். அதில் சில ஹீரோக்கள், அதிலும் அஜித்குமார் போன்ற முக்கிய நடிகர்களே துணை போவதுதான் வேதனையாக உள்ளது.
இத்திரைப்படத்திற்கு நடிகர் அஜித்குமார் மிகப் பெரிய தொகை சம்பளமாக பெற இருப்பதாக கேள்வி. பணத்திற்கு ஆசைப்படாத நடிகர் அஜித்குமாரே, பணத்திற்காக எதையும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா என்றே தோன்றுகிறது.
இத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஸ்ரீதேவி தமிழ் நடிகையாக இருந்தாலும், பாலிவுட் சென்ற பிறகு, தமிழ் கலாச்சாரத்தை மறந்து, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார்.
இந்திய கலாச்சாரத்தை சீரழித்ததில், இந்தி படங்களின் பங்கு பெரியது. அதில் நடிகை ஸ்ரீதேவிக்கும் பங்கு உண்டு. என்னதான் தமிழ் நடிகையாக இருந்தாலும் அவரின் கணவர் ஒரு வட இந்தியர். அவருக்கு கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. இவரின் மகள்கள் இன்று கேவலமான கலாச்சாரத்தில் வாழ்வதும், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும், அதை ஊரே திட்டுவதும் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்களுக்கு இது சகஜம்.
ஆனால் அவர்கள் இங்கு வந்து தமிழில், தமிழ் கலாச்சாரத்தை நாசமாக்கும் விதமாக படம் எடுப்பதும், அதற்கு மிக முக்கியமான நடிகரே துணைபோவதும், அதுவும் மக்களின் நல்ல மதிப்பையும் அன்பையும் பெற்ற நடிகர் அஜித்குமாரே நடிப்பதும் தான் கொடுமையிலும் கொடுமை.
விஸ்வாசம் திரைப்படம் குடும்ப கலாச்சாரத்துடன் எடுக்கப்பட்டது. குடும்பங்களின் பேராதரவாலும், அஜித் ரசிகர்களின் பெரும் விசுவாசத்தாலும் அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் அடுத்து வரவிருக்கும் இந்த திரைப்படம் குடும்ப கலாச்சாரத்தை அடியோடு அழித்துவிடும். சிலபேர் செய்யும் தவறுகளை, பலபேருக்கு காட்டி பலபேரை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதுதான் இன்றைய கால சினிமா. அதுபோல் தான் இத்திரைப்படமும்.
சில பெண்கள் செய்யும் தவறை பலபேர் செய்வது போல் காட்டி, பெண்களின் உரிமை என்ற பெயரில் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை தூண்டி, பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வது தான் இதன் கதை.
இன்றைய கால சினிமாக்கள் ஆண்களை நல்ல வழிக்கு கொண்டு செல்வதை விட்டு விட்டு, பெண்களையும் கெட்ட வழிக்கு கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
திரைப்படங்களில் ஆண்கள் புகைப்பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கும் எதிர்ப்பு வலுத்ததால், இன்று சில ஹீரோக்கள் தங்கள் படங்களில் புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டனர்.
ஆனால் பெண்கள் புகைப்பிடிப்பதாகவும், மது அருந்துவதாகவும் காட்டத் தொடங்கிவிட்டனர். காரணம் பெண்களை ஈசியாக ஏமாற்றி விடலாமல்லவா? கேள்வி கேட்டால் கூட, ஆண்கள் மட்டும் செய்யலாம், பெண்கள் செய்யக் கூடாதா? பெண்கள் என்ன அடிமைகளா? என்று எதிர்க் கேள்வி கேட்டு பெண்களின் தாழ்வு மனப்பான்மையை தூண்டிவிட்டு, அவர்களின் உரிமைப் பிரச்சினையாக ஆக்கிவிடலாம்.
பெண்களும் என்ன செய்வார்கள், இது தங்கள் உரிமை என்பது போல் நினைக்க தொடங்கிவிடுவார்கள். இதைதான் இந்தப் படமும் செய்கிறது.
இவர்களின் குறிக்கோள் பணம், பணம், பணம் மட்டுமே. ஆனால் பெண்கள் இது தன் பாலினத்தை தவறான, மிக மோசமான பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் இவர்களைப் போன்ற ஆட்கள் பிழைக்க முடியாது.
இன்று எப்படி இருக்கவேண்டும் என்பதை நிறுத்திவிட்டு, நாளை எப்படி இருப்போம் என்பதை யோசிக்கும் தொலைநோக்குப் பார்வை பெண்களுக்கு வந்துவிட்டாலே இத்தகைய திரைப்படங்கள் தங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.
மேற்கத்திய நாடுகளில் பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரிவதில்லை. செக்ஸ் அடிமைகளாக, விபச்சார அடிமைகளாக, இரவானதும் பிழைப்புக்காகவும் பணத்திற்காகவும் கஸ்டமர்களை தேடி தெருவில் வந்து அலையும் பல பெண்களின் மிக கேவலமான நிலைமை எத்தனை பேருக்கு தெரியும்? அது போன்ற நிலைமை இந்தியாவில் இல்லை. அதற்கு காரணம் அதன் கலாச்சாரமே. ஆனால் அதைப்போல் இங்கே விரைவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். முதலில் சம உரிமை என்று சொல்வார்கள். பிறகு சம உரிமை என்ற பெயரில் கெட்ட விஷயங்களை கற்றுக் கொடுத்து, பெண்களை கெடுத்து, ஒன்றுமில்லாமல் செய்து, நாளையே நடுத்தெருவில் இதுபோல் நிற்க வைத்துவிடுவார்கள். இது கண்டிப்பாக நடக்கும்.
அதாவது மற்றவர்கள் எதுவும் செய்யாமல், பெண்களை பெண்களே அதாவது தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக்கொள்ளும் நிலைமைக்கு கொண்டுவந்து விடுவார்கள். (அதாவது நல்ல விஷயங்களுக்கு சம உரிமை என்பதை மாற்றி, கெட்ட விஷயங்களுக்கு சம உரிமை என்று சொல்லி செய்ய வைப்பார்கள். வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவும்) பிறகு பெண்கள் ஆண்களை எப்படி குறை சொல்ல முடியும்? (இதில் எங்களுக்கும் சுயநலம் இருக்கிறது- எங்கள் வீட்டு பெண்களை நினைத்து)
ஆணாதிக்கம் அதிகம் என்று சொல்லும் இந்தியாவில் ஒரு பெண் இந்திய பிரதமராக என்றோ வந்து விட்டார். ஆனால் ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லப்படும் அமெரிக்காவின் சரித்திரத்தில் ஒரு பெண் கூட இதுவரை அமெரிக்க அதிபராக வந்ததில்லை.
நாம் தவறு செய்யும் ஆண்களை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆண்கள் தவறு செய்யாமல் இருக்கிறார்கள். அதற்கு அவர்களின் வீட்டில் உள்ள பெண்களே காரணம். தன் வீட்டுப் பெண்களை மனதில் நினைத்து தான் பல ஆண்கள் தவறுகள் செய்யாமல் இருக்கிறார்கள். தன் மனைவியையும், தாயையும், சகோதரிகளையும் நினைத்து கெட்டப் பழக்கவழக்கங்களை விட்டவர்கள் பலபேர். அப்படி செய்தாலும் இலைமறைகாயாக செய்வதும், ஒரு கட்டுப்பாட்டுக்குள் செய்வதுமே தங்கள் வீட்டில் உள்ள பெண்களை நினைத்து தான்.
யோசித்துப் பாருங்கள். பெண்களும் தவறுகள் செய்ய ஆரம்பித்து விட்டால், பெண்களே செய்கிறார்கள் நமக்கென்ன என்ற மனப்பான்மை ஆண்களுக்கு வந்துவிடும். பிறகு அனைவரும் சேர்ந்து செய்வார்கள். நமது சமுதாயம் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். ஆண்களுக்கு பெண்கள் மேலும், பெண்களுக்கு ஆண்கள் மேலும் வெறுப்பு உண்டாகும்.
ஒரு சிறிய கற்பனை: ஒரு ஆண் தன் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருகிறான். வீட்டில் அவன் மனைவி ஒருவேளை சுய ஒழுக்கம் இருப்பவளாக இருந்தால் கண்டிப்பாக அதை எதிர்ப்பாள், சண்டையிடுவாள், பிரச்சனையை பெரிதாக்குவாள் அல்லது தன்னை வருத்தியோ, சாப்பிடாமல் இருந்தோ ஏதோ ஒரு வகையில் தன் எதிர்ப்பைக் காட்டுவாள்.
இதனால் அந்த கணவன் ஒன்று குடிப்பதை நிறுத்திக்கொள்வான் அல்லது கட்டுப்படுத்திக் கொள்வான் அல்லது வீட்டிற்கு தெரியாமலாவது பார்த்துக்கொள்வான். ஆனால் ஒருவேளை அவன் மனைவி சுய ஒழுக்கம் இல்லாதவளாக இருந்தால், அவளுக்கும் மது பழக்கம் இருந்தால் வீட்டிற்கு வரும் கணவனை எதிர்க்க மாட்டாள். மாறாக தனக்கும் வேண்டும் என்று கூட கேட்பாள். பிறகு என்ன நடக்கும்? இருவரும் சேர்ந்தே அத்தவறை செய்வார்கள். முதலில் வெளியில் செய்வார்கள். பிறகு வீட்டிலேயே செய்வார்கள். அதை பார்க்கும் குழந்தைகளும் அதை செய்ய வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளும் ஒழுக்கம் அற்றவர்களாக மாறுவார்கள். இப்படித்தான் ஒரு சமுதாயமே கெட்டுவிடும் அளவிற்கு சென்றுவிடும்.
இது கொஞ்சம் வித்தியாசமாகவும், கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால் இது மேற்கத்திய நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கே நடப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? விரைவிலேயே வந்து விடும்.
இத்திரைப்படத்தின் கதையும் அதன் விளைவுகளும் பலருக்கு தெரியாததால் தான் அமைதி காத்து வருகின்றனர். தெரிந்து விட்டால் மிகப்பெரிய எதிர்ப்பு உண்டாகும்.
இத்திரைப்படம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தையே சீரழித்துவிடும். பெண்கள் புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் அவர்களின் உரிமை என்பது போல் சொல்லி அவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும்.
இத்திரைப்படம் தவறான பெண்களை ஆதரிக்கவும், நல்ல பெண்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லவும் வழிவகுக்கும். ஆண்கள் யாரும் புகைப்பழக்கத்தையும், மதுப்பழக்கத்தையும் தங்களது உரிமை என்று நினைக்காமல் எதிர்ப்பு தெரிவித்து, பெரிய ஹீரோக்களை தங்கள் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை நிறுத்த வைத்து வெற்றி கண்டார்கள்.(சமீபத்தில் சர்க்கார் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஒரு ஸ்டில் கூட எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டது)
ஆனால் இவற்றை பெண்கள் செய்வது பெண்களின் உரிமை என்று நினைக்கும் சில பெண்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அனைத்து பெண்களையும் சொல்லவில்லை. சில பெண்கள், குறிப்பாக சென்னையில் சில பெண்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொண்டால் அவர்களும் நல்வழிக்கு செல்வார்கள், ஆண்களும் நல்வழிக்கு செல்வார்கள். இல்லையேல் பெண்களும் கெட்டுவிடுவார்கள், பெண்களை பார்த்து பெண்களே செய்கிறார்கள், நமக்கென்ன என்று ஆண்களும் கெட்டுவிடுவார்கள்.
விஸ்வாசம் திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைய அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அத்திரைப்படம் வெற்றியடைய அஜித் ரசிகர்களாகிய நாங்கள் உழைத்த உழைப்பு மிகப்பெரியது.
ஆனால் இந்த திரைப்படம் வெளிவந்தால் அஜித்தின் நற்பெயருக்கு களங்கம் வருவது, அதுவும் மிகப்பெரிய அளவில் வருவது உறுதி. இதுவரை அவர் சேர்த்து வைத்த அனைத்து நற்பெயர்களும் கெட்டுவிடும்.
நாங்கள் அஜித் ரசிகர்களாக இருந்தாலும் நாங்களும் தமிழர்கள் தான். அதனால் தமிழ் கலாச்சாரம் அழிவதை ஒருபோதும் நாங்கள் மட்டுமல்ல, எந்த அஜித் ரசிகனும், ஏன் தமிழன் என்ற கர்வமும், உணர்வும் உள்ள ஒருவர் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நடிகர் அஜித்குமார் அவர்கள் இத்திரைப்படத்தை கைவிட்டு வேறு ஒரு நல்ல கதையுள்ள திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இல்லையேல் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பையும், போராட்டத்தையும் கையிலெடுக்கவேண்டிவரும். விஸ்வாசம் திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு விஸ்வாசமாக இருந்தோமோ, அந்த அளவிற்கு ஏன் அதற்கு மேல் கூட இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பையும், போராட்டத்தையும் காட்டத் தயங்க மாட்டோம்.
(குறிப்பு: தமிழ் மீதும் தன் தாய் மற்றும் சகோதரிகள் மீதும் அன்பும் பற்றும் உள்ள, தமிழன் என்ற உணர்வுள்ள, தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முடிந்தளவு ஷேர் செய்யவும்……….
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











