மாரி செல்வராஜை விமர்சித்த நடிகை – இயக்குநர்கள் ஆதரவு
இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’.
இப்படத்தில் ஆனந்த் ராஜ் தாதாவாகவும், சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள். முனீஸ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகியுள்ள இப்படத்திற்கு அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகி
விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது..,
எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ் சார், சம்யுக்தா மேடம் ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வரும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது. ஆனாலும் வருடத்திற்கு வருடம் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரைப்படம் மீது இருக்கும் மோகம் தான் இதற்குக் காரணம். நாம் தினசரி செய்தித்தாளில் படிக்கும் ஒரு விசயத்தை, அது நிஜத்தில் நடந்திருந்தால் என்னவாகும் என்பது தான் இப்படம். கண்டிப்பாக மக்கள் ரசிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை ஆராதியா பேசியதாவது….
எல்லோருக்கும் வணக்கம். நான் திரையில் நன்றாக நடிக்க என்னோட டீமின் உழைப்புதான் காரணம். என் இயக்குநர் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த தேவா சாரின் இசையில் எனக்கு நாளாவது படம் நன்றி சார். ஆனந்த்ராஜ் சாரை சின்ன வயதிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன், அவருடன் நடித்தது மகிழ்ச்சி. சம்யுக்தா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ஆங்கிலோ இண்டியன் கேரக்டர், ஆனால் ஒரு தமிழ்பெண்ணான என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி.மாரி செல்வராஜ் இண்டர்வியூவில் டெடிக்கேடிவாக இருந்ததால் நடிகைகளை மலையாளம் எனப் பார்க்காமல் நடிக்கவைத்தேன் என சொல்லியிருந்தார். நாங்களும் டெடிக்கேடிவாக தான் நடிக்கிறோம்.தமிழிலும் நல்ல நடிகைகள் இருக்கிறோம் அவரது பார்வைக்குச் செல்லவில்லை என நினைக்கிறேன்.பத்திரிகைகள்தான் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி என்றார்.
நடிகை தீபா பேசியதாவது…..
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. நானும் சின்னபிள்ளையிலிருந்து ஆனந்த்ராஜ் சாரை பார்த்து வருகிறேன். அவருக்கு மனைவியாக நடித்துள்ளேன். படத்தில் தான் வில்லன், நிஜத்தில் அவர் குழந்தை. இந்தப்படம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. மண், பெண், பொன் மூன்றைத் தேடித்தான் மனிதன் அலைகிறான். மனிதன் தேடித்தேடி அலைந்து வாழ்வை தொலைக்கிறான் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியுள்ளார்கள். இப்படத்தில் நான் ஒரு மனைவி இன்னொரு மனைவி வந்தால் என்னாகும் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார்கள் படம் உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை ஷகீலா பேசியதாவது….
இப்படத்தில் மிக அழகான ஒரு கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் முகுந்தன் அவர்களுக்கு நன்றி. தோழி விஷ்ணுபிரியாதான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார்.எனக்கு மேடை மேல் பேச பயம், ஆனால் ஆராதியா வேற லெவலில் பேசினார். என்னையும் எல்லோரும் சின்ன வயதிலிருந்து பார்த்து ரசிப்பதாகச் சொல்வார்கள்,அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஆனந்த்ராஜ் அண்ணா, நமக்கு எப்போதும் சின்ன வயசுதான். இந்தப்படம் கண்டிப்பாக மக்களுக்குப் பிடிக்கும். நன்றி என்றார்.
நடிகை சம்யுக்தா பேசியதாவது….
தயாரிப்பாளர் அண்ணாதுரை சார் அதிகம் பேசி இன்று தான் கேட்டேன். அவர் மிக அமைதியான மனிதர். மிக நல்ல குணம் கொண்டவர், அவர் மனதுக்கு இப்படம் ஜெயிக்க வேண்டும். முகுந்தன் இப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் தாங்கியுள்ளார். ஆராதியா சொன்னது உண்மைதான். இன்று திரைவாய்ப்பு கிடைப்பது அவ்வளவு பிரச்சனையாக உள்ளது. கலர், மொழி, மட்டுமல்ல, திருமணம் ஆகியிருந்தால் நடிக்கக் கூப்பிடமாட்டார்கள். இது மாறவேண்டும். ஆனந்த்ராஜ் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் மிக ஜாலியானவர். எங்கள் எல்லோரையும் எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்வார். ஷகீலா மேடம் வேற லெவல் காமெடி செய்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா நல்ல இசையைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது..,
இப்படத்தை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு படத்தின் பாடல்கள் ஹிட்டாக முக்கிய காரணம் வரிகள்தான் பாடலாசிரியர் கு கார்த்திக் அவர்களுக்கு என் நன்றிகள். படத்தில் இரண்டு பாடல்தான், ஒரு இடத்தில் இன்னொரு பாடல் வைக்கலாம் எனத் தோன்றியது முகுந்தன் சார் பட்ஜெட் இடிக்கும் என்றார்,நான் செய்து தருகிறேன் என்று செய்துள்ளேன். முகுந்தன் முதல்படத்திலேயே எல்லா கமர்ஷியல் அம்சங்களும் படத்தை அழகாக இயக்கியுள்ளார். ஆனந்த்ராஜ் மிக நன்றாகச் செய்துள்ளார் அவருக்கு நானும் ரசிகன்.இந்தப்படத்தில் அப்பா ஒரு பாடல் பாடியுள்ளார். முதல்படம் எடுக்கும் அண்ணாதுரை சார், நீங்கள் தொடர்ந்து படமெடுப்பீர்கள் வாழ்த்துக்கள். மீடியா நண்பர்கள் இப்படத்தைப் பற்றி நன்றாக எழுதுங்கள் நன்றி என்றார்
இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
நான் கைக்குழந்தையாக இருக்கும் போது அம்மா என்னை அழைத்துப்போன படம் ஆனந்த்ராஜ் படம் தான். அவர் படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தேன். ஶ்ரீகாந்த் தேவா பாடல்களில் அசத்திவிடுவார். மெலடி பாடல் கேட்டால் மட்டும் எனக்கு போட்டு தரமாட்டார். சிவகாசி படத்தில் ஒரு அழகான மெலடி பாடல் தந்தார் ஆனால் அதைப் படத்தில் வைக்கவில்லை. நான் படத்தில் வைக்கமாட்டேன் என மெலடி போட்டுத்தர மாட்டார். ஆராதியா தீயாக பேசினார். எந்த பயமும் இல்லாமல் பேசினார். தமிழில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். ஆனந்த்ராஜ் சாரை அப்போதெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கும் அவர் ஹீயுமர் செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போது பார்க்கும்போது புன்னகை வருகிறது. இந்தப்பட வெற்றிக்குப்பிறகு மதுரை மாஃபியா கம்பெனி, கோவை மாஃபியா கம்பெனி எனத் தொடர்ந்து நடிக்க வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
நான் சின்னவயதில் முதல்படம் செய்த போது, என்னுடைய ஆஸிஸ்டெண்ட் ஒருவரைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார். உரிமை கீதம்,ஆனந்த்ராஜுக்கு முதல் படம் அது தான்.அதில் இருவரும் கலக்கினோம். திரைப்பட கல்லூரியில் படித்தவர் ஆனந்த்ராஜ், அங்கிருந்து நடிக்க வந்தவர்கள் யாரும் சோடை போனதில்லை.ரஜினி சார், ரகுவரன் என எல்லோருமே பெரிய அளவில் கலக்கியுள்ளார்கள். தலைவாசல் விஜய், அருண் பாண்டியன் அந்த வரிசையில் ஆனந்த்ராஜ், இன்றும் நடித்துக்கொண்டுள்ளார். இந்த மாஃபியா கம்பெனி மிகப்பெரிய வெற்றி பெறட்டும். தயாரிப்பாளரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நடிகை ஆராதியா நன்றாகப் பேசினார். நன்றாக நடித்தால் நம் இயக்குநர்கள் கண்டிப்பாக வாய்ப்பு தந்துவிடுவார்கள். இக்காலத்தில் நல்லபடங்கள் மக்களிடம் போய் சேருவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சம்யுக்தா படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக என் வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,
எனக்குக் கிடைத்த எல்லா இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள்தான், அவர்களால்தான் நான் இந்த அளவு வளர்ந்துள்ளேன். நானும் ஆர் கே செல்வமணி எல்லாம் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது என்னை யாருக்கும் பிடிக்காது,அப்போதே ரௌடித்தனம் பண்ண ஆரம்பித்ததுதான் காரணம்.ஆர் கே செல்வமணி,ஆர் வி உதயகுமாரிடம் பல மலரும் நினைவுகள் உள்ளது. எனக்கு வாய்ப்பு தந்த இருவருக்கும் நன்றி. அண்ணாதுரை அவர்கள் முதலில் அணுகி, இந்தக்கதை சொல்ல வந்தபோது, நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.மீண்டும் மீண்டும் கேட்டதால் கதை கேட்க ஒத்துக்கொண்டேன்.அதுதான் இன்று மெட்ராஸ் மாஃபியா கம்பெனி.எனக்கு சம்பளம் தந்துவிடுவீர்கள், டெக்னீஷின்களுக்கும் சரியாகத் தந்துவிடுவீர்களா? எனக்கேட்டேன்,அதைச் சரியாகச் செய்துவிட்டார். மிக நல்லமனது கொண்ட தயாரிப்பாளர்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.என்னுடன் இணைந்து பணியாற்றிய மனைவியாக நடித்த தீபா, சம்யுக்தா, ஆராதியா, என எல்லோருமே மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் தாத்தாவோடு வேலை செய்துள்ளேன். அவரை சின்னவயதிலிருந்து பார்த்து வருகிறேன் திறமைசாலி. என்னால் பயந்து நடிக்கவும் முடியும், பயமுறுத்தவும் முடியும். அந்த திறமை உள்ளது. குழந்தையாக இருந்து பார்க்கிறோம் என எல்லோரும் சொல்வது பெருமையாக உள்ளது. பணம் மட்டும் முக்கியமில்லை, பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், பணம் நிறைய வந்துவிட்டால் அது முக்கியமாகிவிடும் மகிழ்ச்சி போய்விடும். நான் நானாக வந்தவன்தான்.என்னைப் பல பேர் முதுகில் குத்தியுள்ளார்கள்,அதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளேன். மெட்ராஸ் மாஃபியா கம்பெனி குறித்த நேரத்தில் முடிக்கக் காரணம் இயக்குநர்தான். அவருக்கு நன்றி. கதைக்கு நாயகனாக நடித்துள்ளேன்.நல்லபடம் என்று உங்களுக்குத் தோன்றினால் வாழ்த்துங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் ஏ எஸ் முகுந்தன் பேசியதாவது..,
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி எனது முதல்படம். என் தயாரிபபாளர் அண்ணாதுரை ஒரு வழக்கறிஞர், ஆனால் சினிமாவை காதலிப்பவர். இந்தப்படம் இந்த அளவு சிறப்பாக முடியக்காரணம் அவர்தான். சம்பளத்தை அன்றைக்குக் கொடுத்துவிடுவார்.அவர் நல்லமனதுக்குப் படம் வெற்றி பெறவேண்டும்.அவர் காசோடு மட்டுமில்லை கதையோடு வந்தார்.அவர் சொன்ன லைன் நன்றாக இருந்தது.6 மாதத்தில் படத்தை முடித்துவிட்டோம். இந்தக்கதைக்கு ஆனந்த்ராஜ் சார் நன்றாக இருப்பார் என்றேன்,உடனே ஓகே சொல்லி அவரை அணுகினோம், முதலில் மறுத்தவர் கதை கேட்டு வந்தார். அவரால் என்ன வேண்டுமானாலும் நடிக்கமுடியும். அற்புதமாக நடிப்பார். சம்யுக்தா போலீஸ் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்கும் என்று அணுகினோம் சிறப்பாகச் செய்துள்ளார். தீபா,ஆராதியா நன்றாக நடித்துள்ளார்கள். ஶ்ரீகாந்த் தேவா சம்பளமே வாங்காமல் ஒரு பாடல் செய்து தந்தார். நன்றி. குறித்த நேரத்தில் முடிக்கக் காரணமான கேமராமேன் அசோக்ராஜ் அவர்களுக்கு நன்றி. இந்தபடத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.ஒரு நல்லபடம் செய்துள்ளோம் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











