எல்.கே.ஜி – திரைப்பட விமர்சனம்
லால்குடி கருப்பையா காந்தி என்கிற பெயரின் ஆங்கிலச் சுருக்கமே எல்கேஜி. அந்தப் பெயரில் நடித்திருக்கிறார்.ஆர்ஜே பாலாஜி. படத்தில் அவர் வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.
அவருடைய அப்பா பெயர் அழகு மெய்யப்பன். அந்த வேடத்தில் நாஞ்சில் சம்பத்.நடித்துள்ளார். படத்தில்,அவர் மேடைப்பேச்சாளர். தோற்றுப்போன அரசியல்வாதியாகக் காட்டப்படுகிறார். பதவி பணம் சேர்த்தால்தான் அரசியல்வெற்றி என்கிற கருதுகோள் காரணமாக அவர் தோற்றுப்போனவர் ஆகிறார்.
அவர் போல் இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கும் ஆர்.ஜே.பாலாஜி, அதற்காகச் செய்யும் வேலைகள் என்னென்ன? அவற்றில் அவர் வெற்றி பெற்றாரா? என்பதுதான் படம்.
அரசியல் கதை என்பதால் சமகால அரசியல் நிகழ்வுகளைக் காட்டுகிறார்கள்.
வானொலி வர்ணனையாளராக இருந்து நடிகராகியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு, தாம் திரைப்படத்தில் நடிக்கிறோம் என்கிற உணர்வு வரவே இல்லை. பேசுகிறார் பேசுகிறார் பேசிக்கொண்டே இருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகன் போலிஸ் கான்ஸ்டபிளாக இருந்தால் அவருக்கு டிஜிபியை விட அதிக அதிகாரங்கள் இருப்பது போல் காட்டுவார்கள். இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கவுன்சிலர் என்றாலும் கதாநாயகன் ஆயிற்றே.
அமைச்சரே சொல்லியும் அடைத்துக்கொண்ட சாக்கடை சுத்தம் ஆகாது. அதை கவுன்சிலரான ஆர்.ஜே.பாலாஜி சரி செய்வார் உள்ளிட்ட அபத்தக்காட்சிகள் நிறைய.
நாயகியாக பிரியா ஆனந்த். அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை மற்றும் பரப்புரைத் திட்டங்களை வகுக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். படத்தில் அவருடைய ஆலோசனைகளும் செயல்பாடுகளும், மோடி மற்றும் பாஜகவினர் மீதான குற்றச்சாட்டுகளைக் காட்சிப்படுத்தியது போல் இருக்கின்றன.
துணைமுதல்வராக சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் நடித்துள்ளார். அவர் கம்பீரமாக இருக்கிறார். அவர் வேடம் சிறுபிள்ளைத் தனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாஞ்சில்சம்பத்துக்கு அவருடைய நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கும் வேடம். அவரை வைத்துக்கொண்டு திருக்குறளையும் மேடைப்பேச்சாளர்களையும் இஷ்டத்துக்குக் கேலி செய்திருக்கிறார்கள்.
ஜே.கே.ரித்தீஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். அவரை வைத்துக்கொண்டு சமூகவலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைக் காட்டியிருக்கிறார்கள்.
விதுஅய்யண்ணா ஒளிப்பதிவில் தெளிவு. படத்துக்குப் பலமாக இருக்கிறார்.
லியோன் ஜேம்ஸின் இசையில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் பாடல் கேட்கும்படி அமைந்திருக்கிறது.
அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறித்தனம் கதையில் தெரிகிறது. அதை தற்கால அரசியல் நிகழ்வுகளை அதனால் மக்கள் அடைந்திருக்கும் அதிருப்திகளை வைத்து மறைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் கே.ஆர்.பிரபு, ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
இறுதியில் நல்ல சுயேச்சைகளுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லியிருப்பது பொருத்தமா?
படத்தின் தலைப்பு, கதை திரைக்கதை எழுதிய ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது நண்பர்களின் அரசியல் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது.










