தீபாவளியன்று அரசன் காட்சிகள் வெளியாகாது – ஏன்?
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன்.
இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
முந்தைய படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தை வெற்றிமாறன் வேகமாக எடுத்து முடித்துவிடுவார்.எப்படியெனில்? முழுமையான திரைக்கதையுடன் தயாராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படிச் செயல்படுவதன் காரணமாக,இவ்வாண்டு தீபாவளியையொட்டி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால்,முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசன் படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே ராஜன் வகையறா என்கிற இன்னொரு படத்தைத் தொடங்கி அதன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் வெற்றிமாறன்.இதனால் அரசன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்,பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல தீபாவளி நாளில் அரசன் படத்தின் எட்டு நிமிடக் காட்சிகள் வெளியாகும் அது நேரடியாகத் திரையரங்குகளில் திரையிடப்படும் என்று சொல்லியிருந்தார்கள்.
இதனால்,சிம்பு இரசிகர்கள் உள்ளிட்டு அனைவரும் இதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால்,இப்போது சொன்னபடி நடக்காது என்கிற அதிர்ச்சித் தகவல் உலவுகிறது.
என்னாச்சு?
எட்டுநிமிடக் காட்சிகளைத் தேர்வு செய்து அதற்கு,சிம்பு உட்பட அக்காட்சிகளில் இடம்பெறும் அனைத்து நடிகர்களும் குரல்பதிவும் (டப்பிங்) செய்துவிட்டார்களாம்.ஆனால்,அக்காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைத்துத் தரவேண்டிய அனிருத்,அதைச் செய்யாமல் விட்டுவிட்டாராம்.இதனால் அக்காட்சிகள் முழுமை பெறவில்லை.
படம் குறித்த முக்கியமான காட்சிகள் என்பதால் ஏனோதானோவென வெளியிட்டுவிட முடியாது என்பதால் அதை வெளியிடும் முடிவை தள்ளிவைக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.
வெளிநாடு சென்றுவிட்டு சென்னை போனதும் படத்தின் காட்சிகளைப் பார்க்கலாம் என்கிற ஆவலோடு வந்த சிம்புவே இந்தத் தகவலறிந்து விக்கித்துப் போய்விட்டார் என்கிறார்கள்.
இப்போது,படத்தின் தயாரிப்பாளர் தாணு,அவருடைய தயாரிப்பில் உருவாகியுள்ள டிரெயின் படம் டிசம்பர் 4 அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்.அந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்ற அரங்குகளிலெல்லாம் அரசன் படக்காட்சிகளைத் திரையிடலாம் என முடிவெடுத்திருக்கிறாராம்.
அதற்குள் திருமண நிகழ்வுகள் முடிந்து அனிருத் வந்து இசையமைத்துக் கொடுத்துவிடுவார் என்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
அரசன் காட்சிகள் இல்லையென்றாகிவிட்டாலும் சிம்புவின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பை தீபாவளி நாளில் வெளியிடும் முனைப்பில் இருக்கிறார்கள்.











