என்ன விலை – திரைப்பட விமர்சனம்
இராமேஸ்வரம் கடற்கரையில் மனைவி,சிறுவயதுமகன் மற்றும் தங்கையுடன் எளிய வாழ்வு வாழ்ந்துவரும் மீனவர் கருணாஸ்.அவருடைய வாழ்வில் எதிர்பாராமல் ஒரு பெரும்புயல் அடிக்கிறது.அதனால் திருட்டுப்பட்டம்,கைது,காவல்,சிறை என்று சுமக்கவியலாப் பெரும்பழிகளைச் சுமந்து தவிக்கும் அவருக்கு ஆதரவாக வழக்குரைஞர் நிமிஷாசஜயன் களமிறங்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் கதை.
தீட்டுக்கழிக்க வருவோர் தூக்கி எறிகிற காசுகள்,பொருள்கள் மற்றும் உடைகள் ஆகியனவற்றை எடுத்து வாழ்கிறார் கருணாஸ்.ஒருநாள் விலைமதிப்பு அதிகமுள்ள தங்கப்பதக்கம் அவருக்குக் கிடைக்கிறது.அதை எடுத்ததும் அவர் வாழ்க்கை மாறுகிறது.அவர் நேர்மையாக ஒரு காவலரிடம் அதைக்கொடுத்ததுதான் பெருங்குற்றமாகிறது.அவரைத்தவிர அனைவரும் அறமற்று செயல்படுவதால்,கொள்ளைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்.அதிலிருந்து மீண்டாரா?இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
நேர்மையான,உழைத்துச் சம்பாதிக்கவேண்டும் என்கிற உயரிய குணத்துடன் வாழும் கருணாஸ்,அந்தக் கதாபாத்திரத்திற்காகவே படைக்கப்பட்டவர் போல் நடித்திருக்கிறார்.அவர் மீது பெரும்பழி சொல்லப்படும்போது கதிகலங்கி நிற்கும் காட்சியில் நம்மையும் கலங்கவைத்துவிடுகிறார்.என் மானத்துக்கு என்னவிலை? என்று சீறும்காட்சியில் நம்மைச் சிலிர்க்க வைத்துவிடுகிறார்.
வழக்குரைஞராக நடித்திருக்கும் நிமிஷாசஜயனின் கதாபாத்திர வடிவைமைப்பு திக்கற்றோருக்குத் துணை கிடைக்கும் எனும் நம்பிக்கை தருகிறது.அவர் கருணாசுக்காக வாதாடுவது அதற்காகத் தரவுகளைத் திரட்டுவது ஆகிய எல்லாக் காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார்.
கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா,வழக்குரைஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் ஆகிய அனைவருமே பொருத்தமாக நடித்து படத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு கதைநாயகனின் தொழிற்களம் தன் திறமையை நிரூபிக்க நல்வாய்ப்பு.சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.தங்கப்பதக்கத்தின் பின்னால் பயணிக்கும் திரைக்கதையும் ஒளிப்பதிவாளருக்கு மகிழ்வுதரும் பயணம்,நீதிமன்றக்காட்சிகளையும் சுவையாகப் படமாக்கியிருக்கிறார்.
சாம்.சி.எஸ் இசை படத்தின் காட்சிகள்,வசனங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்புகளை உயர்த்திப்பிடிக்கும் பணியைச் செவ்வனே செய்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்குக்குச் சவால் விடுகிற மாதிரியான திரைக்கதையோட்டம் அமைந்திருக்கிறது.அதை மிக இயல்பாகக் கையாண்டு படத்தைச் சுவாரசியமாக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சஜீவ்பழுவூர்,தமிழ்நாடு,கேரளா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒன்றியத்திலும் சாமானிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களை அம்பலப்படுத்தியிருப்பதோடு,அதற்கு உரிய விலை இதுதான் என்றும் சொல்லி அதிகாரவர்க்கத்தினரை அதிரவைத்திருக்கிறார்.
மிக மிக ஆழமான கருத்தைப் பேசுகிற படமென்றாலும் பொருத்தமான நடிகர்கள்,சரியான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் துணையோடு பொழுதுபோக்குப் படங்களுக்குச் சற்றும் குறைவின்றிப் படத்தைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சஜீவ்பழுவூர்.
– இளையவன்












