கென்கருணாஸ் நடிக்கும் இரண்டு படங்கள் – விவரம்
வெற்றிமாறன் இயக்கத்தில்,தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்,விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கென்கருணாஸ்.நடிகர் கருணாஸின் மகன்.இவர், நாயகனாக நடித்து இயக்கிய படம் யூத்.இந்தப்படம்,இவ்வாண்டு மார்ச் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.முதல்நாளிலிருந்தே,இரசிகர்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுகளைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
முதல்படம் பெரிய வெற்றி என்றதும் கென்கருணாஸை கதாநாயகனாக வைத்துப் படம் எடுக்க பலர் முன்வந்தனர்.அவை எதையும் அவர் ஏற்கவில்லை,அவருடைய திரையுலக குருநாதர் வெற்றிமாறன் கூப்பிட்டார் என்பதற்காக அவர் இயக்கும் ராஜன் வகையறா எனும் இணையத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வந்தனவாம்.அவற்றையெல்லாம் ஏற்காமல் அடுத்தும் தானே இயக்கி நடிக்கவிருக்கிறார்.அவருடைய அப்பாவே தயாரிப்பாளராக இருக்கிறார்.அந்தப்படத்தை எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கவிருக்கிறார்.அனேகமாக அது யூத் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,அப்படத்துக்கு அடுத்து இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கென் கருணாஸ்.
அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற கட்டாகுஸ்தி 2 படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
யூத் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு,செல்லா அய்யாவு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.செல்லா அய்யாவு சொன்ன மையக்கதை கென்னுக்குப் பிடித்திருக்கிறது.அதை முழுமையான திரைக்கதையாக எழுத இயக்குநர் அவகாசம் கேட்டிருக்கிறாராம்.கென்னின் இரண்டாம் படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் இவர் முழுநீள திரைக்கதையை உருவாக்கி தயாராகிவிடுவார் என்கிறார்கள்.
இந்தப் படத்தையும் கென்கருணாஸின் அப்பா கருணாஸே தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.ஆனால்,அவர் முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை மட்டுமே ஏற்பார்.படத்துக்கு முதலீடு செய்வது மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என்று சொல்கிறார்கள்.இந்நிறுவனம் ஏற்கெனவே ஓரிரு தமிழ்ப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்றும் கென்கருணாஸ் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவேண்டும் என்று அவர்களே தேடிவந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆடி போய் ஆவணி வந்தால் கென் நடிக்கும் இவ்விரண்டு படங்களின் அறிவிப்பும் வெளியாகும் என்றும் அதைத் தொடர்ந்து ஒவ்வொரு படமாக படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொல்கிறார்கள்.











