ரூம் பாய் – திரைப்பட விமர்சனம்
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து வெளியே வந்த நாயகன் சி.நிகில்,ஏலகிரியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், ரூம் பாயாக பணிபுரிகிறார்.ஒருநாள் அந்த விடுதியின் மேலாளர் மர்மமான முறையில் இறந்துபோகிறார்.அதேநேரத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் மாயமாகிறார்.இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் ரூம்பாய் படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் சி.நிகில்,அம்மா, அப்பா, தங்கை ஆகியோரைக் கொண்ட குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நாயகன் அனைவரையும் இழந்து அனாதையாகிறார்.அந்த பெரும் வலியை தன் நடிப்பில் காட்டியிருக்கும் நாயகன்,இதற்குக் காரணமானவர்களைப் பழிதீர்க்கக் கிளம்பும்போது முற்றிலும் வேறுமனிதராக மாறி வியக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார் ஹர்ஷா.நாயகனின் குடும்ப இழப்பு அதற்கான எதிர்வினை ஆகியனவே திரைக்கதையின் மையமாக இருப்பதால் அதில் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை என்றாலும் அவர் வருகிற காட்சிகளில் தன் இருப்பைப் பதிய வைத்திருக்கிறார்.பாடல்களில் இளைஞர்களை ஈர்க்கிறார்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் காப்பாளராக நடித்திருக்கும் பிரபாகர்,இன்னொரு எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் அருண்ராஜா ஆகிய இருவரும் பயப்பட வைக்கிறார்கள்.
ஒருபாடலுக்கு நடனமாடியிருக்கும் நிதிமரோலி, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, கேரளா பெஹமின் ஆகிய அனைவரையும் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜனுக்கு,மிகச்சிறிய இடங்களில் படம்பிடிக்க வாய்ப்பு கொடுத்திருந்த போதும் அந்தக்குறை தெரியாதபடி காட்சிகளை மிக நன்றாக வடிவமைத்திருக்கிறார்.
வேலன் சகாதேவன் இசையில் பட்டர் ஃபிளை கண்ணடிச்சி உட்பட பாடல்கள் கேடு இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசை திரைக்கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.
பிரமாண்டமான காட்சியமைப்புகள் இல்லை என்றாலும், திரைக்கதையில் இருக்கும் திருப்பங்களை, யூகிக்க முடியாதபடி தொகுத்து படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார்
படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர்,குடும்பப்பாசம் கலந்த மர்ம திரில்லர் படம் எப்படி இருக்கவேண்டும் என்கிற விதிமுறையைக் கடைபிடித்து படத்தை வேகமாக்கியிருக்கிறார்.
சொகுசுவிடுதிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள்,சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் நடக்கும் கொடுமைகள் ஆகியனவற்றை வெளிப்படுத்தி அதிரவைக்கும் கதை திரைக்கதையை எடுத்துக்கொண்டு, அதை முறையான திரைமொழியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்ராயன்.
– இளையவன்











