October 29, 2025
சினிமா செய்திகள்

ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தல் விளம்பரம் – அதிர வைக்கும் பின்னணி

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2024 பொங்கலுக்கு வெளியானது மிஷன் சாப்டர் 1 படம்.அதன்பின் அவருடைய அடுத்தபடம் குறித்து எந்தத் தகவலுல் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் சில் நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு காணொலித் துண்டில்,ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் காதல் ரீசெட் ரிபீட் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தப்படத்தில் புதுமுக நடிகர் மதுமகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.ஜியா சங்கர் என்பவர் நாயகியாக நடித்திருக்கிறார்.இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

அவரை சிலர் கடத்தி ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு வைத்திருப்பது போன்ற காணொலியை வெளியிட்டு அப்படம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்படி ஓர் காணொலியை வெளியிட்டு அறிவிக்கக் காரணமென்ன?

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதுமகேஷ், இப்படத் தயாரிப்பாளரின் மகன்.இந்தத் தயாரிப்பாளர் ஏற்கெனவே சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த போட் திரைப்படத்தைத் தயாரித்தவர்.

அவருடைய மகனை கதாநாயகனாக்குகிறேன் என்று சொல்லி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

இப்படம் தொடங்கும் போது, சுமார் பத்து கோடிக்குள் படத்தை முடித்துவிடலாம் என்று சொல்லித் தொடங்கியிருக்கிறார்கள்.ஆனால், படம் முழுமையாக நிறைவடையும் போது அதனுடைய மொத்தச் செலவுத் தொகை சுமார் 34 கோடி ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

புதுமுக நடிகர் படம் ஏ.எல்.விஜய் இயக்குகிறார் என்றாலும் அதற்கு எந்த வியாபாரமும் இருக்காது.பத்து கோடி செலவு என்றால் அதுவே அதிகம்தான் என்பதுதான் எதார்த்தம்.

ஆனால், இந்தப் படத்துக்கு முப்பத்து நான்கு கோடி செலவு செய்து அதிர்ச்சியளித்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.

மகன் கதாநாயகனாக நடிக்கிறார் என்கிற மகிழ்ச்சியில் கேட்கிற போதெல்லாம் பணம் கொடுத்த தயாரிப்பாளர் படம் நிறைவடைந்த நேரத்தில் கணக்குப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

ஆனாலும் செலவாகிவிட்டது.அதை எப்படி மீட்டெடுப்பது? என்கிற ஆலோசனையின் முடிவில்தான் ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தல் காணொலியை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதன்மூலம் இப்போது கணக்கிலேயே இல்லாத ஹாரிஸ் ஜெயராஜை மீண்டும் உயிர்ப்பிப்பது அதோடு படத்துக்கு நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது என்று சொல்லி தயாரிப்பாளரை மகிழ்ச்சிப்படுத்துவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க நினைத்திருக்கிறார்கள்.

படத்தின் மொத்தச் செலவு மிக மிக அதிகமாகிவிட்டதால் மேற்கொண்டு விளம்பரங்களுக்கு இவ்வளவு செலவு செய்தால் எல்லாவற்றையும் மொத்தமாக மீட்டெடுத்துவிடலாம் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி விளம்பரச் செயல்பாட்டைத் தொடங்கிவிட்டார்கள்.

மகன் கதாநாயகன் என்பதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஆகிற செலவை எல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Related Posts