விமர்சனம்

அமீகோ கேரேஜ் – திரைப்பட விமர்சனம்

அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் நண்பன் என்று அர்த்தமாம்.படத்தின் கதைக்குப் பொருத்தமான பெயர்தான்.நாயகன் மகேந்திரன்,படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன்.அவர் வாழ்வில் ஒரு சிக்கல்,அதைத் தீர்க்கப் போனால் அதைவிடப் பெரிய இன்னொரு சிக்கல்.அவற்றிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம்.

பள்ளி மாணவராக இருக்கும்போதும் தாடி வைத்திருக்கிறார் மகேந்திரன்.ஆனால் அதற்கொரு காரணம் சொல்லிவிடுகிறார்கள்.பள்ளிப்பருவம் அதன்பின் காதல் பருவம் அதற்கடுத்து கடமைப் பருவம் எனப் பல மாற்றங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் பொறுப்பாக நடித்திருக்கிறார் மகேந்திரன்.சண்டைக்காட்சிகளில் வேகம் காட்டி வியக்க வைத்திருக்கிறார்.

நாயகி ஆதிரா எளிமையான அழகு.திரைக்கதையைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல அவர் கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.அவரும் அதற்கிசைய நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

படத்தின் பெயரில் நிறுவனம் நடத்தும் ஜி.எம்.சுந்தர் கதாபாத்திரம் எதிர்பாராத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தம் அனுபவ நடிப்பின் மூலம் மேலும் மெருகேற்றியிருக்கிறார்.

கல்லூரி மாணவியாக வரும் ரம்யா,வில்லன்களாக நடித்திருக்கும் முரளிதரன் சந்திரன், தாசரதி மற்றும்
மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா ஆகியோரும் குறைவில்லை.

படத்தில் பெரும்பாலும் இரவுக்காட்சிகள் என்றாலும் அதை நேர்த்தியாகப் படமாக்கி படம் பார்ப்பதை எளிமையாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து.

பாலமுரளிபாலுவின் இசையில் கு.கார்த்திக் வரிகளில் பாடல்கள் அனைத்தும் சுகம்.பின்னணி இசையும் உறுத்தாமல் திரைக்கதையோட்டத்துடன் இணைந்திருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜனுக்கு இது முதல்படம். அப்படிச் சொன்னால்தான் தெரியும் என்பது போல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.மகேந்திரனை வைத்து அவர் எழுதியிருக்கும் கதை ஒவ்வொரு இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வகையில் அமைந்திருக்கிறது.

திரைக்கதையோட்டத்தில் சின்னச் சின்ன குறைகள் இருப்பினும் படத்தின் அடிநாதமாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்தியும் அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று அவர் எடுத்திருக்கும் முயற்சிகளும் வரவேற்புக்குரியன.

– இனியன் – தனா

Related Posts