விமர்சனம்

ரோமியோ – திரைப்பட விமர்சனம்

தொடக்கத்தில் காதல் நாயகனாக நடிக்கும் நாயகர்கள் அடுத்து ஆக்சன்ஹீரோ வாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.தொடக்கத்திலேயே ஆக்சன் படங்களில் நடித்துவிட்ட விஜய் ஆண்டனிக்கு முழுமையான காதல் நாயகனாக நடிக்க ஆசை.அதை நிறைவேற்றியிருக்கும் படம் ரோமியோ.

நாயகி மிருணாளினிரவி மீது காதல்கொண்டு போராடி கரம் பிடிக்கிறார்.அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே ஒரு பெரும் சிக்கல். அதை எப்படிக் கையாளுகிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என முழுமையான காதலனாக நடிக்க முயன்றிருக்கிறார்.நன்றாக நடனமாடி வியக்க வைக்கிறார்.

மிருணாளிணிரவிக்கு சும்மா வந்து போகும் கதாநாயகியாக இல்லாமல் நடிக்க வாய்ப்புள்ள வேடம்.அதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெற்றிருக்கிறார்.

விஜய் ஆண்டனியுடன் வரும் யோகிபாபு, பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி ஆகியோரும் படத்துக்குப் பலமாக இருக்காறார்கள்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் முரளி மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் விஜய் ஆண்டனிக்கு ஏற்றவாறு வடிவமைத்திருக்கிறார்கள்.

கொல்லர் தெருவில் ஊசி விற்றிருக்கும்
இசையமைப்பாளர் பரத் தனசேகர், வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். விஜய் ஆண்டனி பாடியிருக்கும் பாடல் நன்று.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

படத்தொகுப்பாளர் விக்கி,தம் பணியை மறந்து வந்த காட்சிகள் அனைத்தையும் இரசித்து அப்படியே வைத்துவிட்டார்.அது சில இடங்களில் பலவீனமாகியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் விநாயக் வைத்தியநாதன். குடும்ப அமைப்புகளுக்குள் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிராகச் சிந்தித்திருக்கிறார்.

மிருணாளினியின் ஆசை சரியா? தவறா? என்கிற விவாதத்தைத் தாண்டி பெண்களின் தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது இலட்சியங்கள் திருமணத்துடன் முடிந்து போக வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

மனைவிக்கு மரியாதை செய்யும் கணவர்கள் பெருமைப்படவும் மற்றோர் கற்றுக்கொள்ளவுமான கதையும் அதற்கு அமைக்கப்படிருக்கும் சுவையான திரைக்கதையும் இரசனை.

இக்கதையை ஏற்றுக்கொண்டு இப்படம் உருவாகக் காரணமாக இருந்த விஜய் ஆண்டனி பெண்களின் பெருவிருப்பத்துக்குரியவராகிறார்.

– தனா

Related Posts