வீரப்பன் ஆவணப்படத்தொடர் புதிய சாதனை
கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படத் தொடர், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 14.12.2023 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்ட்டு வருகிறது.
இந்த ஆவணப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ஆவணப்படக்குழு் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…….
இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த ஆவணப்படத் தொடர் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது.
இரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த ஆவணப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். தமிழின் மிகச்சிறந்த ஆவணப்படத்தொடர் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தத் தொடர், வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்தத் தொடர் வீரப்பனின் ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.
இந்தத் தொடரின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ள, இந்தத் தொடர் இதுவரையிலும் வெளியான வீரப்பன் பற்றிய படங்களிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது.
‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடருக்குக் கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான நிகழ்வை மக்கள் கூடியிருக்கும் அர்பன் ஸ்கொயரில் (Urban Square) இல் அரங்கேற்றியுள்ளது.
மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம்.
இந்நிகழ்வில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, வண்ணங்களைத் தீட்டி வீரப்பன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தனர். மேலும் ஜீ 5 தளத்திற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இது குறித்தான காணொலி இணைப்பு….
‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடரை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் நக்கீரன் பிரபாவதி தயாரித்துள்ளார்.
இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் பிரத்தியேகமாக ஜீ5 இல் திரையிடப்பட்டு வருகிறது.
‘கூச முனிசாமி வீரப்பன்’ 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், ஜீ5 100 எனும் தள்ளுபடி கூப்பனை ஐஈ5 தளம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ZEE5 தளத்தின் சந்தாவில் 100 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











