பார்ட்னர் – திரைப்பட விமர்சனம்
கூடுவிட்டுக் கூடு பாயும் கதைகள் படித்திருப்போம் சில படங்களும் வந்திருக்கின்றன.அதை மையப்புள்ளியாக வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை ரசம் கலந்து கொடுக்க முனைந்திருக்கிறார் இந்த பார்ட்னர்.
நாயகன் ஆதியும் யோகிபாபுவும் நண்பர்கள் + திருடர்கள். அரைவேக்காடு விஞ்ஞானி பாண்டியராஜனின் கண்டுபிடிப்பு ஒன்றைத் திருடுகிறார்கள். அதன் விளைவு யோகிபாபு ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவர் திரும்ப யோகிபாபுவாக மாற எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவும்தாம் படம்.
உடலால் பெண் உள்ளத்தால் ஆண் என்கிற கதாபாத்திரத்திற்குப் பெரிதும் நியாயம் செய்திருக்கிறார் ஹன்சிகா.நிஜத்தில் தான் ஒரு பெண் என்பதை முற்றிலும் மறந்தால்தான் இப்படி நடிக்கமுடியும்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார். வெள்ளையாய் இருக்கும் பெண் எதைச் செய்தாலும் இரசிக்கலாம் எனும்போது யோகிபாபுவின் சேட்டைகளைச் செய்யும் போது அரங்கம் கலகலக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் ஆதி, பெண்ணாக மாறியதாலேயே ஹன்சிகாவைக் காதலிக்கிறார் என்று வைத்துவிடாமல் அவருக்கு பாலக்லால்வானியைக் காதலியாக்கி பாடலும் கொடுத்திருக்கிறார்கள். முதன்முறையாக யோகிபாபு இடத்தில் ஹன்சிகாவைப் பார்த்து அலறும் காட்சிகளில் அலப்பறை செய்கிறார்.
ஜான்விஜய், தங்கதுரை, ரவிமரியா, முனீஸ்காந்த், ரோபோசங்கர் என்கிற நடிகர்கள் பட்டியலைப் பார்த்தாலே இது சிரிப்புப் படம் என்கிற எண்ணம் வரும். அந்த எண்ணத்தை நிறைவேற்ற அனைவரும் உழைத்திருக்கிறார்கள்.
நகைச்சுவைப் படங்களில் வசனங்களுக்குத்தானே முக்கியத்துவம் என்று மனம் சோர்ந்துவிடாமல் காட்சிகளில் வண்ணங்கள் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபீர் அகமத்.
சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
இந்தச் சமுதாயத்தில் பெண்கள் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? என்பதை பெண்ணுருவில் இருக்கும் ஓர் ஆண்மகனை வைத்துச் சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர் மனோஜ்தாமோதரன்.
திரைக்கதையில் பல இடங்களில் சறுக்கினாலும் மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
கூந்தலாக இருந்தாலும் மொட்டையாக இருந்தாலும் இன்னொருவருடையது என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடாதது என்பதில் பல அர்த்தங்கள் உள்ளன.
– இளன்









