லியோ தமிழ்நாடு திரையரங்க வியாபாரம் – முழுவிவரம்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் லியோ. விஜய், த்ரிஷா நடித்து வருமசஞ்சய்தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியானது.
இப்படம் ஆயுதபூசை விடுமுறையையொட்டி அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் வியாபாரம் தற்போது நடந்துவருகிறது.
முதல்கட்டமாக மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய விநியோகப்பகுதிகளின் வியாபாரம் முடிந்துவிட்டதாம்.
மினிமம் கியாரண்டி அடிப்படையில் நடந்துள்ள இந்த வியாபாரத்தில், சேலம் மற்றும் மதுரை விநியோகத்தை ஃபைவ்ஸ்டார் செந்தில் பெற்றிருக்கிறாராம். அதன் விலை, சேலம் சுமார் பத்துகோடி, மதுரை சுமார் பதிமூன்று கோடி.திருச்சி பகுதி விநியோக உரிமையை நாராயணசாமி பெற்றிருக்கிறார். அதன் விலை சுமார் பனிரெண்டரை கோடி, திருநெல்வேலி பகுதியை முத்துக்கனி என்பவர் கைப்பற்றியிருக்கிறார். அங்கு விலை சுமார் ஏழு கோடி என்கிறார்கள்.
இதுவரை வியாபாரம் நடந்த சேலம் மதுரை திருச்சி திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மொத்தம் நாற்பத்தி இரண்டரை கோடி.
இவைதவிர, சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு தென்னாற்காடு மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ரெட்ஜெயண்ட் நிறுவனம் லியோ படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்தால் வேறு விநியோகஸ்தர்களுக்கு அந்தப்படம் கிடைக்கும்.
அதற்கும் தற்போதே விலை நிர்ணயம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சென்னை சுமார் ஒன்பது கோடி, செங்கல்பட்டு சுமார் இருபத்தியிரண்டு கோடி, கோவை சுமார் பதினாறு கோடி, வட ஆற்காடு தென்னாற்காடு சுமார் பத்துகோடி என்று நிர்ணயித்திருக்கிறார்களாம்.
தமிழ்நாடு திரையரங்க வியாபாரம் சுமார் நூறுகோடி என்று சொல்வதற்காகவே இந்த விலை நிர்ணயம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
என்ன நடக்கப் போகிறதெனப் பார்ப்போம்.











