சினிமா செய்திகள்

கவின் செய்த செயல் – இயக்குநர் அதிர்ச்சி

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் பியார்பிரேமாகாதல். ஹரீஷ்கல்யாண் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை இயக்கியிருந்தார் இளன். அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனாலும் இயக்குநர் இளனுக்கு அடுத்தபடம் எளிதாக அமையவில்லை.

மறுபடியும் ஹரீஷ்கல்யாணையே கதாநாயகனாக வைத்து ஸ்டார் என்கிற படத்தைத் தொடங்கினார்கள்.ஆனால் அந்தப்படம் தொடரவில்லை.

அதன்பின், இளன் சொன்ன கதை நடிகர் தனுஷுக்குப் பிடித்ததென்றும் அதனால் இளன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

அதற்காகப் பல மாதங்கள் காத்திருந்தும் அப்படமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

இதனால், நடிகர் கவினை வைத்து புதியபடம் ஒன்றைத் தொடங்கினார் இளன். எவ்வித அறிவிப்பும் இன்றி தொடங்கப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவந்தது. இன்னும் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிற நிலையில் தற்போது இருக்கிறதாம்.

இந்நிலையில், இந்தப்படத்தை விட்டுவிட்டு நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதியபடத்துக்குச் சென்றுவிட்டாராம் கவின்.

அப்படத்தின் படப்பிடிப்பு மூன்று அல்லது நான்கு மாதங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்து விட்டே மீண்டும் இளன் படத்துக்கு வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் கவின்.

இதனால், பத்துநாட்கள் இருந்தால் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடையும் எனும் மகிழ்ச்சியில் இருந்த இளன் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

இதை வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் இளன்.

ஒரு வெற்றிப்படம் கொடுத்த பின்னும் ஒருவருக்கு இவ்வளவு சோதனைகளா? என்று விழி உயர்த்துகிறது திரையுலகம்.

Related Posts