விமர்சனம்

பிச்சைக்காரன் 2 – திரைப்பட விமர்சனம்

பெரும் பணக்காரர்களில் ஒருவரான விஜய்ஆண்டனிக்கு நண்பர்களின் சதியால் பிச்சைக்கார விஜய்ஆண்டனியின் மூளை வைக்கப்படுகிறது.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

பெரும்பணக்காரர் மற்றும் பிச்சைக்காரர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்களும் ஏற்கெனவே பார்த்ததுதான். நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

நாயகி காவ்யாதாப்பருக்கு பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் வந்துபோகும் வேடம். கிடைத்த வாய்ப்பில் குறையேதும் வைக்காமல் இரசிகர்களைக் கவர்கிறார்.

தேவ்கில், ஜான்விஜய், ஹரீஷ்பேரடி ஆகியோர் முதல்பாதி படத்தில் வில்லன்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்கிற முதுமொழிக்கேற்ப அவர்கள் வேடங்கள் அமைந்திருக்கின்றன.

யோகிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர்அலிகான் ஆகியோரில் மன்சூர்அலிகான் முன்னிலை வகிக்கிறார்.

அரசியல்தலைவராக வரும் ராதாரவியின் பாத்திரப்படைப்பு பார்த்துச் சலித்தது. அதிலும் தன் அடையாளம் பதிக்க அவர் முன்றிருக்கிறார்.

ஓம்நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணினிவரைகலை இல்லாத காட்சிகளில் இருக்கும் அழகு அவருடைய திறமைக்குச் சான்று.

நாயகனாக நடிப்பதோடு நில்லாமல், எழுத்து, இயக்கம், இசை, படத்தொகுப்பு ஆகிய முக்கியப் பணிகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

மூளை மாற்றின் மூலம் நடக்கும் ஆள்மாறாட்டம் அதன் விளைவுகள் என்று போகும் என நினைத்தால், ஊழல் எதிர்ப்பு அரசியல் எனும் பாதையில் கதை பயணிக்கிறது. இந்தப் பாதை மாற்றம் படத்தைப் பலவீனப்படுத்துகிறது.

திரைப்படத்துக்கு மிகவும் அடிப்படையான எழுத்தில் தடுமாற்றம் ஏற்பட்டதால் படத்தொகுப்பிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.

பாடல்கள் கேடகலாம். பின்னணி இசையை இரசித்துச் செய்திருக்கிறார்.

பண்பு மாறாட்டம், தாய்ப்பாசம் ஆகியனவற்றினால் வென்றார் முதல் பிச்சைக்காரன், ஆள் மாறாட்டம் அரசியல்போராட்டம் ஆகியனவற்றால் பின்னணிக்குப் போயிருக்கிறார் இரண்டாவது பிச்சைக்காரன்.

– முத்து

Related Posts