சினிமா செய்திகள்

2 விமானம் 4 ரயில் 400 பஸ் – ஏறி அடிக்கும் வாரிசு

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை, விஜய்யின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றிருக்கிறார்.

இதனால், இந்தப்படத்தின் விளம்பரங்களைப் பெரிய அளவில் செய்து இரசிகர்களை ஈர்க்கவேண்டும் என அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

இதற்காக,ரஜினியின் கபாலி பட விளம்பரத்தை விமானத்தில் செய்தது போல, வாரிசு படத்துக்கும் குறைந்தது இரண்டு விமானங்களிலாவது விளம்பரம் செய்யப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

அதோடு கமலின் விக்ரம் படத்துக்குச் செய்தது போல,ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவரை செல்லக்கூடிய நான்கு தொடர்வண்டிகளில் வாரிசு பட விளம்பரம் செய்யப்படவும் திட்டமிடுகிறார்களாம்.

இவை தவிர, தமிழ்நாடு முழுவதையும் கவனிக்க வைக்கிற மாதிரி சுமார் நானூறு பேருந்துகளில் வாரிசு விளம்பரத்தைச் செய்யத் திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றனவாம்.

இப்படிப் பல அதிரடி விளம்பரங்கள் செய்து வாரிசு படத்தை மிகப்பெரிய படமாக மாற்ற முடிவு செய்து வேலை செய்து கொண்டிருக்கிறாராம் லலித்குமார்.

அஜீத்தின் துணிவு படத்துக்கு முதலில் அதிகத் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் நிலையில் அதைவிடக் குறைவான திரையரங்குகளில் வெளியாகும் வாரிசு படத்துக்கு இவ்வளவு விளம்பரங்களா? என்று வியப்பவர்களுக்கு இரண்டாம் நாளிலிருந்து எல்லாத் திரையரங்குகளும் எங்களுக்குத் தான் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள் வாரிசு படக்குழுவினர்.

Related Posts