புத்துயிர் பெறும் பிக்பாஸ் அல்டிமேட் – கமலுக்குப் பதில் சிம்பு
விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டு வருகின்றனர். 24/7 ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, ஜுலி, தாமரை, பாலாஜி முருகதாஸ், நிரூப், உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.
அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக கமல் அறிவித்துவிட்டார்.
அவருக்குப் பதிலாக அந்நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கப்போவது யார்? என்கிற ஆவல் எல்லோருக்கும் இருந்தது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அதற்கான பதில் இருக்கிறது. ஆம், கமலுக்குப் பதிலாக அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பது சிம்புவாம்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டன என்றும் வரும் சனிக்கிழமை அவர் பிக்பாஸ் அல்டிமேட் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பிக்பாஸ் அல்டிமேட் புத்துயிர் பெறும் என்றும் சொல்கிறார்கள்.











