சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற களத்தில் சந்திப்போம் – படக்குழுவினர் உற்சாகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததுடன் இன்று முன்னணியிலுள்ள பல நடிகர்கள்,நடிகைகள். இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் 90 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் களத்தில் சந்திப்போம்.

ஜீவா,அருள்நிதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்தியாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.

இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன், இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி,ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் என்.ராஜசேகர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.அபிநந்தன் இராமனுஜம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் தளப்தி தினேஷின் மகன் பிரதீப் இப்படத்தின் மூலம் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இந்தப்படம், இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டாலும் கொரோனா சிக்கல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திரையுலகினர் ஆச்சரியப்படுகிற மாதிரி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய வெளியீட்டு உரிமை ஆகியன சுமார் ஐந்து கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறதாம்.

படம் பார்த்துவிட்டு இவ்வளவு விலை கொடுத்து ஒரு நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனராம்.

Related Posts