September 10, 2025
விமர்சனம்

சத்தியசோதனை – திரைப்பட விமர்சனம்

ஒரு சிறிய கிராமம், அங்குள்ள ஒரு காவல்நிலையம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகிய இரண்டு பென்னாம்பெரிய அமைப்புகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாகியிருக்கும் படம் சத்தியசோதனை.

நாம் செல்லும் சாலையில் ஒரு பிணம் கிடந்தால் பார்த்தும் பார்க்காததும்போல் ஒதுங்கிப் போவோம். ஆனால் இந்தப்படத்தில் நாயகன் பிரேம்ஜி, அப்படி ஒதுங்கிப்போகாமல் அவ்வுடலில் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போய் காவல்நிலையத்தில் ஒப்படைக்கிறார். நேர்மை மற்றும் அறவுணர்வின் பொருட்டு செய்யப்படும் அச்செயல் திட்டமிட்டு ஐயத்துக்குள்ளாக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லிச் சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கிறார் பிரேம்ஜி. அய்யய்யோ இவரை நகைச்சுவைக் காட்சிகளிலேயே சகித்துக் கொள்ளவியலாதே,இவர் நாயகனாக நடித்திருக்கிறாரா? எனச் சிலர் பதறலாம். ஆனால் அவர்களெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம்சித்தா, படத்துக்கு ஒரு நாயகி தேவை என்பதற்காக வைக்கப்பட்டிருக்கிறார் போலும்.குறைவாக இருந்தாலும் அளவாக இருக்கிறார்.

காவலர்களாக நடித்திருக்கும் சித்தன்மோகன், செல்வமுருகன் ஆகியோர் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சித்தன் மோகன் சிதறடிக்கிறார். சிரிப்பும் கும்மாளமுமாய்ப் படம் நகர அவருடைய காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன.

ரேஷ்மா, கர்ணராஜ்,ஹரிதா,ராஜேந்திரன் ஆகியோர் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம் அவருக்கே உத்தரவிடும் அநாயச பாட்டி ஆகியோர் அருமை. ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் சிந்தனைக்குரியவை.

ரகுராம்.எம் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையிலும் குறைவில்லை.

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு கதைக்களத்தையும் கதைமாந்தர்களையும் சிந்தாமல் சிதறாமல் பார்வையாளர்களிடம் சேர்த்திருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம், நாட்டின் முதல்குடிமகனிலிருந்து கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் பொதுவானது என்று எழுத்தில் சொல்லப்பட்டிருப்பது எழுத்தாக மட்டுமே இருக்கிறது. உண்மை முற்றிலும் வேறு என்பதை அழகாக வெளிப்படுத்தும் திரைக்கதை அமைத்து அனைவரும் இரசித்துச் சிரிக்கும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ்சங்கையா.

– குமரன்

Related Posts