கும்பாரி – திரைப்பட விமர்சனம்

கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருளாம்.இதைப் பெயராக வைத்திருக்கும்போது கதைக்கருவும் அதுவாகத்தானே இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறது, அதோடு ஒரு காதல் கதையும் கலந்திருக்கிறது.அண்ணன் தங்கை பாசமும் இணைந்திருக்கிறது.
நாயகன் விஜய்விஷ்வாவும் அறிமுக நடிகர் நலீப் ஜியாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கட்டத்தில் விஜய்விஷ்வா காதலில் விழுகிறார்.அந்தக் காதலுக்கு நாயகியின் தரப்பில் கடும் எதிர்ப்பு. அதை மீறி காதலர்களுக்குத் திருமணம் செய்துவைக்க நண்பன் முயல்கிறார். அந்தச் சூழலில் நண்பன் காணாமல் போகிறார். அவருக்கு என்ன ஆனது? காதலர்கள் நிலை என்ன? என்பனவற்றிற்கான விடைதான் படம்.
நாயகன் விஜய்விஷ்வாவுக்கு நட்பு, காதல், கோபம், வேகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். அவற்றை நிறைவாகச் செய்திருக்கிறார். காதல்காட்சிகளில் உற்சாகமும் சண்டைக்காட்சிகளில் ஆக்ரோசமும் தெரிகிறது.
நண்பராக நடித்திருக்கும் நலீப் ஜியா புதுமுகம்,ஆனால் அது கொஞசமும் தெரியாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகி மஹானா சஞ்சீவி பாத்திரப்படைப்பு கேள்விக்குரியது.ஆனால் அதில் அவர் நடித்திருக்கும் விதம் ஏற்புடையது.காதல், பாசம் ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்.
நாயகியின் அண்ணனாக நடித்திருக்கிறார் ஜான் விஜய்.பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி, காதல் சுகுமார்,மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.சரி,தவறு ஆகிய இரண்டும் கலந்து இரசிகர்கள் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதையில் கருத்துவேறுபாடு உள்ளவர்கள் கூட காட்சிகளில் மயங்குவார்கள். ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகம் கன்னியாகுமரியின் அழகுகளை மாறுபட்ட கோணங்களில் காட்டி மகிழ்வித்திருக்கிறார்.
இசை அமைப்பாளர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்சன் பிரித்திவி ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கலாம்.நட்பு குறித்த பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையிலும் குறைவில்லை.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.ஜெய், சில இடங்களை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் கெவின் ஜோசப், நட்பு, காதல், சகோதர பாசம் ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து அனைத்துத் தரப்பினரும் இரசிக்கும் படம் தர எண்ணியிருக்கிறார். நல்ல காட்சி அனுபவம்.
– இளையவன்