கண்ணன் ரவி இந்தப் படத்தைத் தயாரித்தது எப்படி? – ஜீவா விளக்கம்
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’.இப்படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளர் தீபக் ரவி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
சனவரி 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைதயாரிப்பாளர் முத்துக்குமரன், சண்டைப்பயிற்சி இயக்குநர் பிரபு ஜாக்கி, நடிகர்கள் சர்ஜின்,சஷ்டி,சரத்,ராஜேஷ்,ஹிதேஷ்,சுபாஷ்,சுப்ரமணி,ஜெய்வந்த்,தம்பி ராமையா,ஜீவா,நடிகைகள் பிரார்த்தனா நாதன்,மணிமேகலை,இணைஇயக்குநர் லிபின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணைதயாரிப்பாளர் முத்துக்குமரன் பேசுகையில்….
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி அன்றுதான் வெளியாக இருந்தது.ஆனால் தற்போது நாங்கள் அதற்கு முன்னதாக ஜனவரி 15 ஆம் தேதி அன்று வெளியிடுகிறோம். தலைவர் தலைமையில் ஒரு படம் வெளியாக இருந்தது. தற்போது தலைவர் தம்பி தலைமையில் ஒரு படம் வெளியாகிறது.இந்தப்படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகளை ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கினோம்.தை திருநாள் அன்று வெளியிடுகின்றோம்.இதற்கு இந்தப்படக்குழுவினர் முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.நடிகர் ஜீவா காலை 7 மணிக்கு முதல் காட்சி என்றால் 6:55 க்கு தயாராக படப்பிடிப்புத் தளத்தில் இருப்பார். படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவினர் அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் ஒன்றிணைந்து பணியாற்றினர். படப்பிடிப்புத் தளத்தில் வருணபகவானின் ஆசியும் எங்களுக்குக் கிடைத்தது.45 நாட்களில் ஜீவாவின் 45 ஆவது திரைப்படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் படப்பிடிப்பு அவருடைய தலைமையில் சிறப்பாக நிறைவடைந்தது.படத்தின் வெளியீடு திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக வெளியாவதால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இயக்குநர் – படத்தொகுப்பாளர் – இசையமைப்பாளர்- ஆகியோர் பணியாற்றி வருவதால்.. அவர்களால் இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றார்.
நடிகர் ஜெய்வந்த் பேசுகையில்,
டி டி டி ( TTT) என்றால் தி டைம் ஃபார் டிவிஸ்ட் என சொல்லலாம்.ஜனவரி 30 வெளியீடு என்று சொல்லிவிட்டு, 15ஆம் தேதியே வெளிவருவது மிக்க மகிழ்ச்சி.எந்த ஒரு கலைஞனுக்கும் தான் நடித்த படம் பண்டிகை தினங்களில் வெளியானால் அது மகிழ்ச்சியைத் தரும்.அந்தவகையில் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.’தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனச் சொல்வார்கள்.அந்தவகையில் இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் மிகவும் கேளிக்கையான படம்.ஃபீல் குட் படம் என்றும் சொல்லலாம்.45 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு தருணம் முழுவதும் அனைவரும் குடும்பமாக மகிழ்ச்சியாக பணியாற்றினோம்.படப்பிடிப்புத் தளத்தை நடிகர் ஜீவா எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பார்.அதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டிற்கான முதல் ஃபேமிலி என்டர்டெய்னர் படம் இது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைதந்து பார்த்து இரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை பிரார்த்தனா நாதன் பேசுகையில்,
தலைவர் தம்பி தலைமையில் எனும் இந்தப்படம் எனக்கு ஸ்பெஷலானது.2025 என்றால் எனக்கு இந்தப்படத்தின் நினைவுகள்தான் அதிகம்.மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் ஒரு அருமையான இடத்தில் நாங்கள் அனைவரும் தங்கி இருந்தோம்.45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.நிறைவடைந்த தருணத்தில் பிரிகிறோமே என்ற கவலைதான் அதிகம் ஏற்பட்டது.அந்த அளவிற்கு அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து சந்தோஷமாக பணியாற்றினோம். இந்தப்படத்தில் நான் சௌமியா எனும் கதாபாத்திரத்தில் மணப்பெண்ணாக நடித்திருக்கிறேன்.என்னுடைய திருமணத்திற்கு முதல்நாள் நடைபெறும் உணர்வுப்பூர்வமான மற்றும் அனைத்து விதமான உணர்வுகளையும் சார்ந்ததுதான் இந்தப்படம்.இதுபோன்ற அழுத்தமான வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசுகையில்,
இந்தஆண்டின் கிளீன் ‘யு’ சர்டிபிகேட் உடன் திரையரங்கத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து இரசிக்கும் வகையிலான தகுதிபடைத்த படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் அமைந்திருக்கிறது.அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக நான் எந்தப்படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.கடந்த ஆண்டுகளில் நடித்து சிறிதளவு நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறேன்.அதைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இப்படத்தின் இயக்குநர் நிதிஷ் கதையை விவரிக்கும்போதே அதில் நடிக்கவேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.உயிர்ப்புள்ள கதை தனக்குத் தேவையானதை தானே தேடிக்கொள்ளும் என்பதைப்போல இந்தப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஃபாசிலுக்கு பிறகு இயக்குநர் சித்திக் – லாலுக்கு பிறகு இயக்குநர் நிதிஷ் ஒரு பீல்குட் ஃபேமிலி என்டர்டைனரை வழங்கி இருக்கிறார். அவருடைய முதல் தமிழ்ப்படத்தில் நானும் பங்களிப்புச் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.
இந்தப்படத்தின் ஜட்ஜ்மெண்டை நடிகர் ஜீவா தீர்மானிக்கிறார்.இயக்குநர் நிதிஷ், ஜீவாவைச் சந்தித்து கதையைச் சொல்லும்போது, ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன்,ஏராளமான வெற்றிப் படங்களை வழங்கிய நடிகர் ஆகிய அனுபவங்களை தனக்குள் வைத்துக்கொண்டு,இந்தக்கதைக்குள் தனக்கான பங்களிப்பு என்ன? என்பதை விட தயாரிப்பாளரின் கோணத்தில் இருந்து இந்தப்படத்தின் கதையை முழுவதுமாகக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜீவா.வெற்றி பெறும் படத்தில் நான் கதாநாயகனாக இருக்கிறேன் என்று உறுதியாக தீர்மானித்து இப்படத்தில் நடித்திருக்கிறார்.இப்படித்தான் இந்தப்படம் உருவானது.அனைவருக்கும் திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கி அதில் தன்னுடைய இருப்பையும் நிலைநிறுத்திக் கொண்ட ஜீவாவை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்த எண்ணம் அனைத்து ஹீரோக்களுக்கும் இருந்தால் ஓடாத படங்களின் எண்ணிக்கை குறைந்து,ஓடும் படங்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.அந்தவகையில் இந்த 2026 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாயகனாக ஜீவா வெற்றி பெறுவார்.
கல்யாணம் தொடர்பான காட்சிகள் எத்தனையோ படங்களில் இடம் பிடித்திருக்கும்.இருந்தாலும் இதில் ஒரு புதுவகையான திரைக்கதையில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.இப்படத்தின் தயாரிப்பாளர் துபாயில் அமர்ந்துகொண்டு படத்தின் அனைத்துப் பணிகளையும் ஜீவாவிடம் ஒப்படைத்து விட்டார்.
இந்தப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் படமாக்கப்பட்டது.அதன்போது எனக்கு ‘மைனா’ திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது.நானும்,பங்காளி இளவரசும் படம் நெடுக வரும் கதாபாத்திரத்தை அனுபவித்து இரசித்து நடித்திருக்கிறோம்.ஜனவரி 15ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.இந்தப்படத்தை பார்த்துவிட்டு யாரும் எந்த ஒரு சிறிய குறையையும் சொல்லிவிட முடியாது. இப்படி ஒரு திரைப்படம் வரவேண்டும் என அனைவரும் கொண்டாடுவார்கள்.
நகைச்சுவை நடிகர்களாக நடிப்பவர்கள் கதையின் நாயகர்களாக அடுத்தகட்டத்திற்குச் செல்லும்போது நகைச்சுவை நடிப்பிற்கான வெற்றிடம் உருவாகிறது.அதனை நிரப்புவதற்காக பல்வேறு தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள்(மேடையில் இருக்கும் அறிமுக நடிகர்கள்) இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்….
தலைவர் தம்பி தலைமையில் உண்மையில் ஒரு மேஜிக்தான்.நடிகரும்,நண்பருமான வி டி வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச்சொன்னார்.அந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார்.சில காரணங்களால் அது நடைபெறவில்லை.அந்தப்படத்தின் இயக்குநரும்,இசையமைப்பாளரும் என்னைத் தொடர்பு கொண்டனர்.அந்தப்படத்தின் பாடல்களுக்காகவும்,பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கு நான் பாராட்டுத் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியதுடன் தமிழிலும் பணியாற்றுங்கள் என கேட்டுக்கொண்டேன்.அதன்பிறகு இயக்குநர் ஒருநாள் என்னைச் சந்தித்து கதையை சொன்னார்.அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம் அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வைக் கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார்.அவர் சொன்னவிதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்கவேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.அவரது இயக்கத்தில் வெளியான ஃபாலமி எனும் திரைப்படத்தில் நடிகர் பசில்ஜோசப் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார்.அதன்பிறகு பசில்ஜோசப் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்தார்.
இந்த இயக்குநர் மற்றும் அவருடைய குழுவினருடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம்.அதன்பிறகு படப்பிடிப்புத்தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம்.அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம்.இந்தப்படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது.அதனையும் உருவாக்கினோம்.சிறிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது.என்னுடைய 45 ஆவது படத்தில் 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது.இந்தப்படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவரும் ஏற்கனவே யூட்யூப் மூலமாக பிரபலமானவர்கள்.அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான இரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது.இயக்குநர் அவர்களுக்கு ஏற்றவகையிலும் திரைக்கதையும்,வசனங்களையும் அமைத்திருக்கிறார்.ஒட்டுமொத்தமாக இந்தப்படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் அனைவருடைய கண்களிலும் கண்ணீர்.நடிகர்கள் மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்திருந்த அந்த ஊர் மக்களும் கண்ணீர் விட்டனர்.படக்குழுவினரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர்.
இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்தக்கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம்.ஆனால் இரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள்.படத்தைப் பார்க்கும்போது இரசிகர்கள் ‘இப்படி எல்லாம் நடக்குமா என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்.
தம்பி ராமையா,இளவரசு என எல்லோரும் இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள்.இந்தப்படத்தில் பணியாற்றியபோது என்னுடைய சின்னச்சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன்.அத்துடன் இந்தப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்,படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி.. ஒரு புது ட்ரீட்மென்ட்… புது வகையிலான நெரேட்டிவ்…வருணன் தலைவர் தம்பி தலைமையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.இது தமிழ் இரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு இதை இரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.உண்மையாக உழைத்து இருக்கிறோம்.இதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.
ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்தப்படம் வெளியாக இருந்தது.ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஜனநாயகன் படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்பக் கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்.கடந்த 30 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பு நிறுவனம் ஏழு எட்டு திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.அதனால் எங்களுடைய ஆதரவு எப்போதும் அவருக்கு இருக்கிறது.அதனால் நாங்கள் எப்போதும் போல் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்காக ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.அதேபோல் இந்தப்படத்திற்கும் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களை துபாய் தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக என்னுடைய தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியை தேர்வு செய்திருந்தார்கள்.அந்த தமிழ்ச்சங்கத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி விளம்பரதாரர் என்பதால்.. அவரை நேரில் சந்தித்தோம்.அந்தத்தருணத்தில் இளம் திறமைசாலிகள் கொண்ட குழு இருக்கிறது.அவர்களை வைத்து இப்படி ஒரு காம்பாக்ட் பட்ஜெட்டில் படம் தயாரிப்பதற்கு விருப்பமா? எனக் கேட்டோம்.உடனே அவர் தாராளமாக செலவு செய்து நல்லதொரு படத்தை உருவாக்குங்கள் என மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.அவருக்கும் அவருடைய வாரிசு தீபக்ரவி அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிறுவனம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.அனைத்துப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.











