October 29, 2025
செய்திக் குறிப்புகள்

வசந்தபாலன் பேய்ப்படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குநர் பேட்டி

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் படம் டீமன். இப்படத்தில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த ரோனி ரபெல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிகுமார்.எம் படத்தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுத, ராக் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்த ஹரிஷ் மற்றும் ராஜு ஆல்பெர்ட் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேலிடம் கேட்டபோது….

இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.

தில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டது.ஆனால், அவர்கள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அதனால், அவர்களுடைய மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் உலவுகின்றன.

அந்த நிகழ்வை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை எழுதினேன்.அதற்குள் நம்முடைய கலாச்சாரத்தை உள்ளடக்கி திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

இது ஒரு உளவியல் திகில் படமாக இருக்கும். திகில் படம் என்றாலே, ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு வீடு, அதற்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் பயங்கள். அதன்பின் அவற்றிற்கான காரணம் என்றுதான் இருக்கும்.

இந்தப் படத்தில்,ஏராளமான வீடுகள் கொண்ட ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் திகில் நிகழ்வுகள் நடக்கும். அவற்றால் நாயகன் பாதிக்கபப்டுகிறார்.அதனால் அவருக்கு உளவியல் தொடர்பான சிக்கல்கள்.இவற்றைத் திகில் கலந்து சொல்லியிருக்கிறோம்.இப்படம் இரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும்.வித்தியாச அனுபவத்தைக் கொடுக்கும்.

’டீமன்’ என்று பெயர் வைத்ததற்கு கதை ஒரு காரணம்.இன்னொன்று இப்பெயரில் ஓர் ஈர்ப்பு இருக்கிறது.அதனால் பல பெயர்களைப் பற்றி விவாதித்து இறுதியில் இந்தப்பெயரை வைத்தோம்.

நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்.முதலில், நான் வளர்ந்த மண் சார்ந்த கதையில் முதல் படத்தை எடுக்க நினைத்தேன், அதற்கான கதையையும் எழுதி வைத்திருந்தேன்.அப்படத்திற்கான செல்வுத்தொகை அதிகம். அது எனக்குக் கிடைக்கவில்லை.

அப்போது,இந்தப் படம் எடுப்பதற்கான வாய்ப்பும், அதற்கான நிதியும் கிடைத்தது, அதனால் தான் இந்தப்படத்தை எடுத்தேன்.அதோடு, பேய்ப் படம் என்றால் இரசிகர்களுக்குப் பிடிக்கிறது என்பதும் ஒரு காரணம்.

வசந்த பாலனிடம் பணியாற்றிவிட்டு இப்படி ஒரு படம் எப்படி? எனக்கேட்கிறார்கள். அவர், பேய்ப் படம் இயக்கினால் எப்படி இருக்கும் என்பதை இப்படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.பய உணர்ச்சி மட்டுமின்றி பாச உணர்ச்சியும் கொண்ட பேய்ப் படமாக‘டீமன்’ இருக்கும்.

’அங்காடித் தெரு’ படத்தில் இருந்து வசந்தபாலன் சாரிடம் உதவியாளராகப் பணியாற்றினேன். இப்போதும் அவர் படம் பண்ணும் போது பணியாற்றுவேன். நான் படம் இயக்கப் போவதாகச் சொன்னவுடன் எனக்கு அவர் பல உதவிகளைச் செய்தார். இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளில் பல உதவிகளைச் செய்ததோடு, அவருடைய பெயரையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்

இவ்வாறு அவர் கூறினார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.யுவராஜ் வெளியிடுகிறார். இவர் ஏற்கனவே ’எறும்பு’, ‘கருங்காப்பியம்’ போன்ற படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப்படத்தைப் பார்த்து மிகவும் பிடித்துப்போனதால் இப்படத்தை வெளியிடவுள்ளார்.

Related Posts