கப்பிள் ஃப்ரெண்ட்லி – திரைப்பட விமர்சனம்
இண்டீரியர் டெகரேசன் எனப்படும் உள்ளக வடிவமைப்புத் துறையில் நுழைந்து வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கும் நாயகன் சந்தோஷ் சோபனும், ஐடி எனப்படும் மென்பொருள் துறையில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்று நினைக்கிற நாயகி மானசி வாரனாசி ஆகிய இருவரும் எதிர்பாராமல் சந்தித்து எதிர்பாராமல் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.அதன்பின் நாம் எதிர்பார்க்கிற மாதிரியே காதலர்கள் ஆகிறார்கள்.காதல் வந்ததும் அதற்குத் தடையும் வருகிறது.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் கப்பிள் ஃப்ரெண்ட்லி.
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன்,வறுமை நிறைந்த இளைஞனாகவும்,திறமை மிகுந்த துறைசார் வல்லுநராகவும்,மனம் நிறைந்த காதலனாகவும் நடித்திருக்கிறார்.எல்லா நேரங்களிலும் அந்தந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசிக்கு சும்மா வந்துபோகிற வேடமாக இல்லாமல் அழுத்தமான வேடம்.அவருடைய அழகும் பாத்திரத்துக்கேற்ற நடிப்பும் நன்று.ஓரிரு இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
யோகிபாபு நடித்திருக்கிறார்.அவர் வருகிற காட்சிகள் சிரிக்கிற மாதிரி அமைந்திருக்கின்றன.ராஜிவ் கன்கலா,ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன்,கதையில் இருக்கும் காதல் உணர்வுகளை காட்சிகளிலும் காட்டி இரசிக்க வைத்திருக்கிறார்.நாயகனுக்கும் நாயகிக்கும் கூடுதல் பலமாக அவருடைய ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் இதமாக அமைந்து கேட்டு,பார்த்து இரசிக்க வைக்கிறது.பின்னணி இசை திரைக்கதையோடு இசைந்திருக்கிறது.
கலை இயக்குநர் மைக்கேலுக்கு முக்கியத் தேவை படத்தில் இருக்கிறது.அதை உணர்ந்து உழைத்து காட்சிகளை இயல்பாக வைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா,படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்திருக்கிறார்.கொண்டு சென்றுமிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் சந்திரசேகர்,உண்மையான காதல் உணர்வுகளுக்கு எந்நாளும் மரணமில்லை என்பதைச் சொல்லியிருக்கிறார்.அதோடு, காதல்,கல்யாணம் ஆகியனவற்றின் மூலம் பெண்களின் கனவுகள் கைவிடப்பட்டுவிடக்கூடாது எனும் நல்ல கருத்தைச் சொல்லியிருப்பதோடு,அதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
மென்மையும் உறுதியும் கலந்த தன்மையான படம்.
– இளையவன்










