October 25, 2025
கட்டுரைகள்

அடுத்தபடம் குறித்து ஆதிக்ரவிச்சந்திரனுக்கு அஜீத் சொன்ன கறாரான அறிவுரை

திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்டார்.அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.இதையொட்டி நடிகர் அஜீத் பற்றிய 33 புதியதகவல்கள்…

1.அஜீத்தின் முதல்படம் என்வீடு என் கணவர்.1990 இல் வெளியான இந்தப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.அவர் கதாநாயகனாக நடித்து முதலில் வெளியான படம் தமிழில் அமராவதி.ஆனால் கதாநாயகனாக ஒப்பந்தமான முதல்படம் தெலுங்கில் பிரேம புஸ்தகம்.இது இரண்டாவதாக வெளியானது.இவை இரண்டும் 1993 இல் வெளியாகின.அதை வைத்தே 33 வருடங்கள் நிறைவு என்று சொல்லப்படுகிறது.அஜித்துடைய முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்துக்கு நான்தான் க்ளாப் அடிச்சேன் என்று சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார்.

2.அஜீத் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் ஐந்து.அவை வாலி,வில்லன்,அட்டகாசம்,பில்லா,அசல்

3.அஜீத் மூன்று வேடங்களில் நடித்த படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு.

4.அஜித் கவுரவ வேடத்தில் நடித்த படங்கள் நான்கு.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,நீ வருவாயென,என்னை தாலாட்ட வருவாளா,இங்கிலீஷ் விங்லீஷ்

5.அஜீத் கதாநாயகனாக நடித்த ஐந்தாவது படம் ராஜாவின் பார்வையிலே.அந்தப்படத்தில் அவருடைய நேரடிப் போட்டியாளரான விஜய் உடன் நடித்தார்.

6.ராஜாவின் பார்வையிலே விஜய், கல்லூரி வாசல் பிரசாந்த், உல்லாசம் விக்ரம், ஆனந்த பூங்காற்றே கார்த்திக், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் மம்முட்டி, ஆரம்பம் ஆர்யா,ராணா,பாசமலர்கள் அரவிந்த்சாமி,பகைவன் சத்யராஜ்,நீ வருவாயென பார்த்திபன்,என்னை அறிந்தால் அருண்விஜய்,அசோகா படத்தில் ஷாருக்கான் என பிற ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

7.அஜீத் நடிக்க வந்த ஏழாம் ஆண்டு 1997.அவ்வாண்டு அவர் நடிப்பில் வெளியான ஐந்து படங்களும் தோல்வி அடைந்தன.

8.நேருக்கு நேர்’ படம் மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித், விஜய்யை வைத்துதான் ஆரம்பிக்கப்பட்டது. இருவரது காம்பினேஷனிலும் 8 நாட்கள் படப்பிடிப்பும் நடந்து விட்டது. சில காரணங்களால் அஜித் அந்தப்படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதன்பின் சூர்யா வந்தார்.இது அந்தப்படத்தின் கோ டைரக்டர் மணிபாரதி சொன்ன தகவல்.

9.நடிகர் அஜித், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பதவி வகித்து வந்தார்.இவர் தலைமையில் இயங்கிய தக்சா குழு,அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான நவீன விமானத்தை தயாரித்தது. இதில் ஆலோசகராக 9 மாதங்கள் பணி புரிந்த அஜித் குமார், விமான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் பல்வேறு ஆலோசனைகளை தக்‌சா குழுவுக்கு வழங்கி வந்தார்.

10.அஜீத்துக்கு வி செண்டிமெண்ட் உண்டு.அதன்படி வந்த படங்கள் பத்து.அவை.. வான்மதி, வாலி,வில்லன்,வரலாறு,வீரம்,வேதாளம்,விவேகம்,விஸ்வாசம்,வலிமை,விடாமுயற்சி

11.ஏ.ஆர்.முருகதாஸ்,எஸ்.ஜே.சூர்யா,ஏ.எல்.விஜய் உட்பட 11 இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

12.12 ஆம் நூற்றாண்டில் ஒளவையாரால் இயற்றப்பட்ட ஆத்திச்சூடி இவருக்கும் மிக மிகப் பிடித்த நீதிநூல்.அதிலுள்ள 109 கருத்துகளையும் தன் கைபேசியிலேயே சேமித்து வைத்திருக்கிறார்.

13.இந்து முஸ்லிம் கிறிஸ்து ஆகிய மும்மதங்களும் அவருக்கு சம்மதம்.தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் எனக்கு வரும் முதல்வாழ்த்து அவருடையதுதான் என்கிறார் அவருடைய மேனேஜர் சுரேஷ்சந்திரா.

14.தனக்கு நெருக்கமான எல்லா நண்பர்களின் பிறந்தநாள்களுக்கு தவறாமல் வாழ்த்து சொல்வார்.அது எப்போதும் ஃபார்வர்ட் மெசேஜாக இருக்காது.சம்பந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கி இறுதியில் அஜீத்,ஷாலினி,அனோஸ்கா,ஆத்விக் ஆகிய நான்கு பெயர்களும் இருக்கும்.

15. உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும்போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன்னருளன்றோ கந்தா உன்னருளன்றோ முருகா,,, சொல்ல சொல்ல இனிக்குதடா – இந்தப்பாடல் வரிகள் அவருக்கு மிகவும் பிடித்தவை. இதுபோல் வாழவே முயல்கிறார்.

16.அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திராவை தன் நெருங்கிய நண்பராக மட்டுமன்று ஒரு சகோதரராகவும் எண்ணி அந்த முறைப்படியே அவர் வீட்டு விசேட நிகழ்வுகளில் பங்காற்றிவருகிறார்.

17.காரணம் வேண்டாம் காரியம் வேண்டும் என்பது அவருடைய தாரக மந்திரம்.இது என் வேலைக்காக மட்டும் சொல்லவில்லை உங்கள் வாழ்க்கைக்காகவும் தான் சொல்கிறேன் என்று தம் பணியாளர்களிடம் சொல்வார்.

18.மிர்ச்சி சிவாவின் மனைவி ப்ரியா,ஷாலினியின் தோழி.அதனால் அவரை தங்கையாகப் பாவித்து அந்த உறவுக்கான கடமைகளைச் செய்கிறார்.

19.முறையாக வரி கட்டுபவர்.பணம் நூறு ரூபாய் வருகிறதென்றால் நூறு ரூபாய் வருகிறதென எண்ணமாட்டார்.அந்தப் பணத்தில் வரி போக மீதித்தொகையைத்தான் கணக்கில் வைப்பார்.

20..தன்னிடம் வேலைக்குச் சேரும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வேலைக்கு வரும்போதே ஆறு சட்டை, 3 பேண்ட், 2 ஷூஸ், 7 செட் சாக்ஸ்,மொபைல் போன்,பைக் ஆகியனவற்றைக் கொடுத்துவிடுவார்.

21.தன்னிடம் பணியாற்றும் அனைவர் குழந்தைகளின் கல்விச் செலவும் அவருடையது.பள்ளி முதல் கல்லூரி வரையிலான கட்டணங்களை அவரே கட்டிவிடுவார்.

22.அரசாங்க அலுவலக வேலைகளின் போது தன் சம்பந்தப்பட்ட வேலைக்காக அந்த அலுவலகங்களுக்குப் போகும்போது அவர் பெயரைப் பயன்படுத்தி வரிசையைத் தாண்டக்கூடாது என்பது அவருடைய கண்டிப்பான உத்தரவு.

23.புத்தக வாசிப்பில் தீராத ஆர்வம் உள்ளவர்.தமிழ்நாடு,இந்தியா மட்டுமின்றி உலகத்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறார்.

24. மே தினப்புரட்சி உள்ளிட்ட உலகின் முக்கிய நிகழ்வுகள் எல்லாம் அவருக்கு அத்துபடி.அதுபற்றிப் பேசத் தொடங்கினால் சரித்திரப் பேராசிரியர் போல் தோன்றுவார்.

25.அவருடைய நட்பு வட்டத்தில் உள்ளோர் எண்ணிக்கை 25.அந்த வட்டத்தில் உள்ளவர்களுடைய வீட்டு விசேசங்களில் தவறாமல் பங்கேற்பார்.

26.திரைப்படங்களில் சாதி மத,அரசியல்,நிற,பாலினப் பாகுபாடு குறியீடுகளுக்கு அவர் எதிரி.தன் படங்களில் அவை எங்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

27.எனக்காகக் கதை எழுத வேண்டாம் உங்கள் கதைக்குள் நான் இருக்கவேண்டும்.அடுத்த படத்தை இயக்கவிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அவர் சொல்லியிருக்கும் கறாரான அறிவுரை இது.

28.நடுத்தட்டு வர்க்க வாழ்க்கை அவருக்கு மிகப்பிடித்தமானது.இப்போது துபாயில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி அங்கே அந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.அவரே வீடு கூட்டுவார்,சமைப்பார், துணி துவைப்பார்,கடைக்குப் போய்வருவார்.

29.பைக் ரேஸ் கார் ரேஸ் ஆகியனவற்றில் கலந்து கொள்வதே பெருமை என்பார்.அந்த மைதானங்களில் அஜீத்குமார் ஃப்ரம் இந்தியா என்று சொல்லப்படுவதும் அந்த மைதானங்களில் அஜீத் இருப்பதால் இந்தியக் கொடி பறப்பதுமே அவருக்குப் பெருமிதம்.அவருடைய தனிப்பட்ட வெற்றி தோல்விகள் பிரதானமில்லை.

30.ஒன்றாம் எண்ணில் அவருக்கு ஈர்ப்பு உண்டு.அவருடைய செயல்களில் அந்த எண் வருகிற மாதிரி பார்த்துக் கொள்வார்.

31.அப்பா மலையாளம் அம்மா சிந்தி என்பதால் அவருடைய வீட்டு மொழியாகவே ஆங்கிலம் ஆகிவிட்டது.அவர் சிந்தனை மொழியாகவும் ஆங்கிலம் இருக்கிறது.ஆனாலும் சரியான தமிழ் உச்சரிப்புக்காக மெனக்கெட்டு தமிழை சிறப்பாக உச்சரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.

32.கேரளாவிலுள்ள குலதெய்வக் கோயில் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகிய ஆன்மீக இடங்களுக்கு ஆண்டுதோறும் தனது வருவாயில் குறிப்பிட்ட விழுக்காடு தொகையைக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

33,அஜீத்தின் 33 வருட திரைப்பயணத்தில் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமல்ல கார் வாங்கும் இடம்,குடும்ப மருத்துவர்,வழக்குரைஞர் உள்ளிட்ட ஆறுபேர் 33 வருடங்களாக மாறவே இல்லை.

நன்றி – குமுதம் வார இதழ்

Related Posts