காத்திருப்போர் பட்டியல் – திரை விமர்சனம்
நாயகன் சச்சின் மணி வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவருபவர். தமிழ் சினிமா வழக்கப்படி அவருக்கும் காதல் வருகிறது. வேலைக்குப் போனால்தான் கல்யாணம் என்று காதலி கறாராகச் சொல்லிவிடுகிறார்.
இதனால், ஒரு தந்திரம் செய்து வேலைக்குப் போகிறார். அது அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.
இதனால் காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் நடக்கிற நாளில் என்ன நடக்கிறது? என்பதுதான் படம்.
நாயகன் சச்சின் மணிக்கு இது முதல் படம். நன்றாக நடித்திருக்கிறார். நாயகி நந்திதா, படத்துக்குப் பலம். நன்றாக இருக்கிறார். நடிப்பும் இருக்கிறது.
அருள்தாஸ், மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், அப்புக்குட்டி, செண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் படத்தில் இருக்கின்றனர்.
ஒரே இடத்தில் அனைவரும் இருந்துகொண்டு படத்தை நகர்த்துகின்றனர்.
வழக்கமான காதல் கதை. திரைக்கதையில் வேறுபடுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலையா டி.ராஜசேகர்.
வேலைக்காக நேர்காணலுக்குச் செல்லுமிடத்தில், முதலாளிக்கே சம்பளம் தருகிற டீலிங், நாயகியின் பிறந்த நாளுக்கு நாயகன் தருகிற விருந்துக்காட்சி, இவ்வளவு வருடங்களில் ஏராளமான படங்களில் சும்மா கடந்துபோகிற ரயில்வே காவல்துறையின் உணர்வுகள் ஆகிய விசயங்கள் இயக்குநரின் பலம்.
சீன் ரோல்டன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பொருத்தம். எம்.சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.
சின்னச் சின்ன குறைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.











