சினிமா செய்திகள்

எல் ஐ கே குளறுபடி ஏப்ரல் 3 ஆம் தேதியே வெளியாகிறது காளிதாஸ் 2

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்கிறார்.துரைராஜ் கலை இயக்கத்தையும்,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளையும் கவனிக்கிறார்கள்.

இந்தப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டது.

இப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மார்ச் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

ஆனால்,இப்போது படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படவிருக்கிறது என்கிறார்கள்.

அதற்குக் காரணம்,விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப்ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே தான் என்கிறார்கள்.

அந்தப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.அப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்றுதான் முதலில் சொல்லப்பட்டது.ஆனால், திடீரென ஏப்ரல் 3 என்று அறிவித்துவிட்டார்கள்.

அதனால் காளிதாஸ் 2, ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்போது அதில் மீண்டும் மாற்றம் நடந்திருக்கிறது.

இதற்கும் காரணம் எல்ஐகே தான். அந்தப்படத்தில் உள்ள சிக்கல்கள் காரணமாக அப்படம் சொன்னபடி ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகாது என்கிறார்கள். அதற்கு மாறாக ஏப்ரல் 10 ஆம் தேதி வருகினோம் என்று சொல்கிறார்களாம்.

எல் ஐ கே படக்குழு இப்படி மாற்றிப் மாற்றிப் பேசுவதால் திகைத்துப்போன காளிதாஸ் 2 படக்குழு, அதிரடியாக ஏப்ரல் 3 ஆம் தேதியே படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

காளிதாஸ் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் மிகுந்த அனுபவமிக்க விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தத் தேதி மாற்றங்களைச் சமாளித்து படத்தை வெளியிட முடிகிறது. வேறு யாராக இருந்தாலும் சிக்கல்தான் என்று சொல்லப்படுகிறது.

Related Posts