சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் சூர்யா – புதிய தகவல்கள்

சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கருப்பு படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. தற்காலிகமாக சூர்யா 46 எனக் கூறப்படும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவுற்றது.

நாக வம்சி தயாரித்து வரும் இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்குப் பின் மனித உணர்வுகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான குடும்பப் படமாக இது இருக்கும்.கஜினி படத்தில் வந்த சஞ்சய் ராமசாமி போன்றதொரு கதாபாத்திரத்தில் சூர்யா சாரை காண்பீர்கள் என்று தெரிவித்துள்ளார் வெங்கி அட்லுரி.இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்விரு படங்களுக்கு அடுத்து சூர்யா இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிற தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

அவ்விரு படங்களில் ஒன்றை மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவிருக்கிறார் என்றும் இன்னொரு படத்தை பா.இரஞ்சித் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சூர்யா 46 படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் ஜீத்து மாதவன் இயக்கும் படத்தின் வேலைகள் தொடங்கிவிடும் என்றும் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நேரத்தில் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் வேட்டுவம் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு முழுமையாக சூர்யா படத்துக்காகத் தயாராவார் பா.இரஞ்சித் என்றும் சொல்கிறார்கள்.

இவ்விரு படங்களையும் ழகரம் எனும் புதிய திரைப்பட நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அந்த நிறுவனமும் நடிகர் சூர்யாவுடையதுதான் என்கிறார்கள்.

இதுவரை சூர்யாவின் நிறுவனம் அவருடைய நெருங்கிய உறவினர்கள் நிறுவனங்கள் ஆகிய எல்லாமே ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தன.முதன்முறை முழுமையான தமிழ்ப் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts