Uncategorized

பக்கிரி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் பிறந்து வளர்ந்த மேஜிக் கலைஞனுக்கு பிரான்ஸ் செல்வது பெரிய இலட்சியம். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

பல போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் அக்கலைஞனுக்கு என்ன நேர்ந்தது? என்பதுதான் பக்கிரி.

மேஜிக் கலைஞன் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அந்த ஒரு வேடம் தான் என்றாலும் அதில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வெறியில் அலைவது பணம் உள்ள பெட்டியைக் கட்டிப்பிடித்தபடியே ஓடிக்கொண்டிருப்பது அதே பணத்தை கஷ்டப்படுகிறவர்களுக்குக் கொடுத்து அப்போது ஒரு நிம்மதி காண்பது ஆகிய காட்சிகள் எழுதப்பட்டதால் மட்டுமின்றி தனுஷின் நடிப்பாலும் மிளிர்கின்றன.

சிறார் குற்றவாளிகளுக்குக் கதை சொல்வது போல் அமைந்த திரைக்கதை தனுஷுக்குப் பலம். பல நேரம் காட்சிகளிலும் சில நேரம் சொற்களிலும் கதையை நகர்த்திச்செல்கிறார்.

மும்பையிலிருந்து பாரிஸ் அங்கிருந்து இலண்டன் அப்புறம் லிபியா எனப் போகும் தனுஷின் பயணத்தில் லாஜிக் இல்லையென்றாலும் மேஜிக் இருக்கிறது.

சிறுவயது தனுஷாக நடித்திருக்கும் சிறுவன் வேடம் வெகு சுவாரசியம். இவராம்மா? என்று பார்ப்போரிலெல்லாம் தன் அப்பாவைத் தேடுவதும் நான் கண்டுபிடிச்சிட்டேன் நாம ஏழை என்பதும் சிரிப்பிலும் கண்கசிய வைக்கின்றன.

மரியாக நடித்திருக்கிற எரின்மோரியார்டியும் நடிகையாகவே நடித்திருக்கிற பொனைஸ்பெஜோவும் நல்ல தேர்வு.

வெள்ளைக்காரிகளுக்கும் பாம்பு, அம்மன், வடிச்சுக் கொட்டவா? போன்ற வசனங்களை வைத்து அக்மார்க் தமிழ்ப்படம் போல ஆக்கிவிட்டார்கள்.

அதிலும் தனுஷைக் கைது செய்ய வருகிற இலண்டன் காவல்துறை, அண்ணா அண்ணா என்று கெஞ்சும் காட்சி சிரிப்புவெடி.

மும்பையில் கதை நடந்தாலும் தமிழகக் கதையாக இருப்பது படத்துக்குப் பலம்.

இயக்குநர் கென்ஸ்காட் நேரடித் தமிழ்ப்படங்களைக் கூட இயக்கலாம்.

ஒரு தனிமனிதனின் பயணத்தை மையமாக வைத்து பல்வேறு அறங்களை வெளிப்படுத்தியிருக்கிற வகையில் பக்கிரி பாராட்டுக்குரிய படம்.

– ஜிஜே

Related Posts