செய்திக் குறிப்புகள்

கமலின் விக்ரம் படத்தில் மாயோன் பட முன்னோட்டம் – சிபிராஜ் மகிழ்ச்சி

சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியுள்ளார்.டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500க்கும் மேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக இரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் விக்ரம் படத்தின் இடைவேளையில் தன் படத்தின் முன்னோட்டம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நாயகன் சிபிராஜ் கூறியுள்ளார்.

Related Posts