February 18, 2026
செய்திக் குறிப்புகள்

எனக்கு பிசினஸ் இருப்பதால் படவுலகில் பின்னடைவு – ஆரி புதியதகவல்

இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”.

இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா,சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தீர்க்கதரிசி என்ற திரைப்படத்தை பரபரப்பாக இயக்கியிருந்த எல்.ஆர்.சுந்தரபாண்டி அதேவேகத்தில் ஃபோர்த் ஃப்ளோர் படத்தை இயக்கியுள்ளார். தணிக்கை செய்யப்பட்ட இந்தபடம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“போடா போடி” படப்புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், “போடா போடி”, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப்சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

மனோ கிரியேசன் (MANO CREATION) சார்பில் தயாரிப்பாளர் ஏ.ராஜா தயாரித்துள்ள இப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 17 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் ஏ.ராஜா பேசியதாவது…..

எல்லாருக்கும் வணக்கம்.எங்களின் 4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது.நிறையப்பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம்.இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை.ஆனால் இந்தக்காலத்தில் ஒரு சரியான படத்தை கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம்.அந்த விஷயத்தில் இந்தப்படம் நல்லபடியாக வந்திருக்கிறது.ஒத்துழைத்த ஆதி,இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…..

4த் ஃப்ளோர் டிரெய்லரை பார்த்தேன்.நன்றாக இருக்கிறது.ராஜா சார்,நீங்கள் திருப்பூரிலிருந்து வந்து இவ்வளவு பேஷனோட ஒருபடம் எடுத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி அடையணும்.ஆரி 10 வருடமாக நல்லபடங்கள் செய்து வருகிறார்.அவர் பெரிய வெற்றிபெற வேண்டும். இன்றைக்கு தமிழ்சினிமாவில் நிறைய புதுப்புது, திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால்,இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள்,தமிழ்சினிமாவுக்குள் வரமுடியும்.இந்தப்படத்தின் டிரெய்லரிலேயே நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.அனிமேஷன், திரில்லர்,கனவுகள்…ஒரு மனிதனுடைய கனவிலிருந்து வர்ற விஷயங்கள் எப்படி நிஜமாக மாறுது,அதிலிருந்து என்னென்ன சம்பவங்கள் நடக்குது,அந்த சம்பவங்கள் உண்மையாகும்போது,ஹீரோ சந்திக்கிற பிரச்சனைகள் என்ன? இதை எல்லாம் டிரெய்லரிலேயே அழகாக சொல்லியிருக்கிறார்கள்.படம் வெற்றிபெற என் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது..,

இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர்.‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது.அமைதியாக,நேர்த்தியாக,மிகப்பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒருபடத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல.அந்தவகையில் இந்தப்படக்குழு பாராட்டுக்குரியது.இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம். நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும்,என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,

நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன்.அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்.ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்அந்த ஃப்ரேமுக்கு,ஒரு தனி உயிர் கிடைக்கிறது.அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை,அமைதி, சென்சிபிலிட்டி.
எதையும் மிகைப்படுத்தாமல்,இயல்பாகவே கவர்கிறவர் அவர்.நடிகனாக மட்டுமல்ல,மனிதராகவும் மதிக்கத் தக்கவர்.அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம்.ஒவ்வொரு காட்சியிலும் அவர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார்.
அதுதான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.
நடிகர்களும் டெக்னிக்கல் டீமும்
ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள். சினிமா என்பது தனிமனித சாதனை அல்ல
என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி.
இந்தப்படம் அனைவருக்கும் அடுத்தகட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் பரத் பேசியதாவது..,

ஆரியும் நானும் பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.ஒரு வருடம் முன்னாடிதான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில்,க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும்.
என்னுடைய திரைப்பயணத்தில் தெரியாமலேயே, கடைசி ஏழுபடங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது.
அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம் எப்போதும் இருக்கும்.அதாவது,சரியான திரைக்கதையும்,நல்ல விளம்பரமும் இருந்தால் அந்தப்படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. குறிப்பாக,டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்தப்படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் சேரன் பேசியதாவது..,

திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும்.
“திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது.அந்தவகையில்,இந்தப்படத்தை தயாரித்து, அதை ரிலீஸ்வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம்.அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி,அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.
இந்தப்படத்தைப் பற்றி பேசும்போது,முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன்தான்.4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும்,அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள்.அந்த டைட்டிலே இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது.படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால்,எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது.இது இன்றைய தலைமுறைக்கும்,அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்தப்படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன்.ஆரி என் நண்பர்,என் மாணவர், என் படத்தில் நடித்தவர்.எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல்,அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி நிற்கும் மனிதர்.அந்தவகையில்,இந்தப்படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும்,ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும்.வாழ்த்துகள் என்றார்.

நடிகர் பிரஜின் பேசியதாவது….

இது ராஜா சார் தயாரித்த நான்காவது திரைப்படம். ராஜா சாரை நான் முதலில் சந்தித்தது,இந்தப்படம் நான் செய்வதாக விவாதிக்காகத்தான்.ஆனால் அந்த உரையாடலுக்குப் பிறகு,அவர் எவ்வளவு நேர்மையான, தெளிவான தயாரிப்பாளர் என்பதை புரிந்துகொண்டேன். ஒரு கதைக்கு என்ன தேவையோ,அதை முழுமையாக செய்து தரக்கூடியவர் ராஜா சார்.நல்ல தயாரிப்பாளர்.
இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மணன் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும்.
கேமராவில் அவர் செய்த வேலை மிகவும் அருமை. அதுமட்டுமல்ல,அவர் ஒரு நல்லநண்பரும் கூட. அவருக்கு வாழ்த்துகள்.
இன்று நான் இங்கே வந்திருப்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம் என் நண்பர்… என் மச்சான்… ஆரி.
நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் Mr. Chennai Finalists ஆக எங்கள் பயணத்தை ஆரம்பித்தவர்கள். அந்தநேரத்திலிருந்து இன்றுவரை,ஆரியின் பயணம் எப்போதுமே உழைப்பின் அடையாளமாகத்தான் இருக்கிறது.
அவன் மிகக்கடினமாக உழைக்கும் மனிதன்.
ஒரு நல்லநடிகன்.அதற்கும் மேலாக,ஒரு நல்ல நண்பன்… ஒரு நல்லமனிதன்.எந்த விதமான ஈகோவும் இல்லாமல்,
யார் எப்போது என்ன உதவி கேட்டாலும்
“பண்ணிடலாம்” என்று முன்னால் வந்து நிற்பவன். இந்த படம் நல்லபடியாக ஓடவேண்டும் என்று என் மனதார நான் வேண்டிக்கொள்கிறேன்.இந்தப்படக்குழுவின் உழைப்புக்கு நிச்சயமாக ஒரு நல்ல வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

இசையமைப்பாளர் தரண்குமார் பேசியதாவது..,

இன்று என்ன பேசவேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வரவில்லை.ஆனால் மேடையில் நின்றபோது ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது – இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் தயாரிப்பாளர் ராஜா சார் என்பதுதான். ராஜா சார் ஒரு குழந்தைமனசு கொண்டவர்.இந்தப்படத்தின் மூலமாகத்தான் நான் அவரை நெருக்கமாக அறிந்தேன்.ஆனால் அவருக்குள் இருக்கும் தீவிரமும்,இந்தப்படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற வெறியும் என்னை மிகவும் ஈர்த்தது.இந்த விழாவுக்கும், இந்த ரிலீஸுக்கும் நான் வந்ததற்கான ஒரே காரணம் அவர்தான்.
சின்னபடங்கள் ஜெயிக்கணும் என்று நாம் எல்லாரும் பேசிக்கிட்டே இருக்கிறோம்.ஆனால் அது நடக்கணும்னா,இப்படிப்பட்ட நேர்மையான முயற்சிகள் வெற்றி பெறவேண்டும்.நான் செய்த பல படங்களின் இசை என் ஸ்டூடியோவுக்குள்ளேயே தங்கிப் போயிருக்கிறது.அந்த உழைப்பு வெளியே வந்து ஜெயிக்கணும்னா,இந்தமாதிரி படங்கள் வெற்றி பெறவேண்டும்.
ஆரி ப்ரோவுடன் ரொம்ப நாளாக ஒருபடம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.இன்று அது நிறைவேறியிருக்கிறது.அவர் ஒரு நடிகன் மட்டும் இல்ல; ஒரு சகோதரன் மாதிரி.மிக நேர்மையான, பொறுமையான,சின்சியரான மனிதர்.
இயக்குநர்,ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் உட்பட முழு டெக்னிக்கல் டீமும் மிக அருமையாக வேலை செய்திருக்கிறார்கள்.ஸ்கிரீன்ப்ளேவும்,இசையும் சரியான இடத்தில் அமர்ந்திருக்கிறது.இந்தப்படம் ஜெயிக்கணும். ஜெயிக்கும்.அதுதான் என் முழு நம்பிக்கை.நன்றி.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,

‘4த் ஃப்ளோர்’என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது.ஒருபடத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும்,அதன் விளம்பர முகமும்தான்.ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழையவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல்பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது.
ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்தபோது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர்.மிகச்சிறந்த மனிதர்.அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

செவன்த் ஸ்டுடியோ சார்பாக கே.கண்ணன் பேசியதாவது..,

எனக்கு முதன்முதலில் சினிமாவை உணரவைத்தவர் என்றால்,அது ராஜா சார்தான்.சென்னை வந்த போது, ஆரம்பித்த நட்பு,அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர வேண்டும் என்பதே என் ஆசை.அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறோம்.
இந்தப்படம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. அதற்காக நாங்கள் முழு நம்பிக்கையோடு,கவனமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம்.மீண்டும் ஒரு வெற்றியாக இந்தப்படம் மாற,உங்கள் அனைவரின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்குத் தேவை.அந்த ஆதரவை தொடர்ந்தும் கொடுங்கள்.நன்றி என்றார்.

இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி பேசியதாவது..,

இது எனக்கு மூன்றாவதுபடம்.தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா,நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்தப்படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.
இந்தப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்கமுடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும்.அதற்குள் காமெடியும் கலந்து வரும்.“இது என்ன ஜானர்?”என்று கேட்டால்,
ஒரேவார்த்தையில் சொல்லமுடியாத படம்.
கதையை முதலில் கேட்டவுடனே
ஆரி சார் இந்தப்படத்தில் இணைந்தார்.
இந்தக்கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல்நபர் அவர்தான்.அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்தப்படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போகவேண்டும் என்ற எண்ணத்தையும்
அவர்தான் கொடுத்தார்.
இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்தப்படம் முழுக்க முழுக்க திரில்லர்,பாடல்கள், எமோஷன்எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி.
அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.இந்தப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது.மீடியா நண்பர்கள் அனைவரும் இந்தப்படத்திற்கு உங்கள் முழுஆதரவைக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் ஆரி பேசியதாவது..,

இன்றைக்கு நல்லசினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்கவேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்தவிழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும் நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில்,தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்டநேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.
சினிமாவில் குவாலிட்டி,மரியாதை,ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல;அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்தநேரத்தில் எனது நன்றி.
பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்னபோதும்,அதை கண்டுகொள்ளாமல்,படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள்.அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம்,ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான்.படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.இங்கு வெற்றிதான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது.வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார்தான்.எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள்.எனக்கு என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை.உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன்.கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts