சினிமா செய்திகள்

பிகில் பாடல் விழா – தொழில்நுட்பக் கலைஞர்கள் கடும் அதிருப்தி

விஜய் நடிக்கும் பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னைக்கு அருகிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.

சுமார் எட்டாயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பெரிய அரங்கம் அது.

அதில் விஜய் ரசிகர்களுக்கென்று சுமார் மூன்றாயிரம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். 

அதேசமயம் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லையாம். 

ஆளுக்கு ஒரு சீட்டு கொடுத்திருக்கிறார்கள், அதுவும் மிகவும் பின்னால் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 

நாங்கள் பணியாற்றிய படத்தின் விழா என்பதால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் விழாவைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.ஆளுக்கு இரண்டு சீட்டுகளாவது கொடுங்கள் என்று கேட்டும் மறுத்துவிட்டார்களாம்.

அப்படி என்றால் அவ்வளவு பெரிய அரங்கை எப்படி நிரப்புவார்களாம்? என்றால், அந்த அரங்கில் நடக்கும் பாடல் விழாவின் நுழைவுச் சீட்டுகளை விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்களாம். 

விஜய்,ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வதாலும், சன் தொலைக்காட்சியில் உடனடியாக ஒளிபரப்பாவதாலும் நிகழ்ச்சியைப் பார்க்க ஏராளமானோர் ஆர்வமாக இருக்கிறார்கள். 

அதைப் பயன்படுத்திக் கொண்ட பட நிறுவனம், விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறதாம். 

இதனால் படத்தில் பணியாற்றியவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Related Posts