September 7, 2024
கட்டுரைகள்

விஷால் வேலைநிறுத்த அறிவிப்பு – யாருக்கும் நம்பிக்கை இல்லை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிப்ரவரி 6,2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவி சாய்க்காத கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தென்னிந்திய திரையுலகினை சார்ந்த ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஒட்டுமொத்தமாக மார்ச்-1ம் தேதி முதல், எங்களின் இந்த நியாமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக விரிவாக கலந்து பேசி இந்த டிஜிட்டல் சேவை வழக்குனர்களுக்கு (Digital Service Providers) எதிராக தமிழ்த் திரையுலகமும் மேற்கண்ட மாநிலங்களுடன் இணைந்து ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்த Digital Service Providers – க்கு பதிலாக மாற்று வழி செய்வது சம்பந்தமாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
எனவே தொடர்ந்து அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நமது தமிழ்த் திரையுலகமானது மிக மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டு இன்று தயாரிப்பாளர்களின் நிலை ஒரு கேள்விக்குறியாகிவிட்டதை நாம் அனைவரும் அறிந்ததே !! இந்த நிலை மாற, நமது நியாமான பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேறும் பொருட்டு வரும் மார்ச்-1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த ஒரு திரைப்பட த்தினையும் வெளியிடுவதில்லை என்று ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நமது தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  நன்றி
– தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம்,  பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள், வேலைநிறுத்தம் வராது. க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசியபோது அவர்கள் கறாராக விலையைக் குறைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அவர்களை மிரட்டுவதற்காகவே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.வேலைநிறுத்தத்துக்கு இன்னும் 22 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஒரு சுமுக நிலை ஏற்பட்டுவிடும். எனவே நீங்கள் பாருங்கள் வேலைநிறுத்தம் வராது என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts