விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் – தள்ளிப் போனது தயாரிப்பாளர் ஆசை

விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இவற்றிற்கடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படமொன்றை உருவாக்கும் முயற்சி நடந்ததாம்.
விநியோகஸ்தர் சக்திவேலன், சில நண்பர்களுடன் இணைந்து அப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தாராம்.
இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன கதை விஜய்சேதுபதி மற்றும் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்திருந்ததாம்.அதனால் படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.
அதன் தொடக்கமாக விஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்து சம்பளம் பேசியிருக்கிறார்கள்.
அவர்களிடம் விஜய்சேதுபதி கேட்ட சம்பளம் சுமார் இருபது கோடி என்கிறார்கள்.இதனால் தயாரிப்பு நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.அதன்பின் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனங்களிடம் அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பள விவரங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். அவை விஜய்சேதுபதி இப்போது கேட்டதைவிடக் குறைவு என்று தெரிந்திருக்கிறது.
அதன்பின் அவர்கள் போட்டுப் பார்த்த கணக்குகளின்படி, விஜய் சேதுபதிக்கு இருபது கோடி சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால் மொத்தப்படத்துக்கு முப்பத்தைந்திலிருந்து நாற்பது கோடி வரை செலவாகும்.படத்துக்கு ஆகும் மொத்தச் செலவுக்கும் வியாபாரத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்று தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது.
அவர்கள் போட்டுப் பார்த்த கணக்குக்குப் பின்னால் விஜய் சேதுபதிக்கு அவர்கள் கொடுக்க நினைத்த சம்பளம் சுமார் எட்டு அல்லது பத்துகோடி என்று சொல்லப்படுகிறது.
அவர்கள் போட்ட கணக்கு அதன்பின் அவர்கள் எடுத்த முடிவு ஆகியனவற்றை விலாவாரியாக விஜய்சேதுபதியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் மறுபேச்சுப் பேசாமல் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொல்லி விலகிப் போய்விட்டாராம்.
விஜய்சேதுபதி விலகிக் கொண்டதும், இயக்குநர் பாண்டிராஜ், ஜெயம்ரவிக்குக் கதை சொல்லியிருக்கிரார். அவர் அக்கதைக்குச் சம்மதம் சொல்லிவிட்டதால் அப்பட வேலைகளில் இறங்கிவிட்டாராம்.
அதனால் விநியோகஸ்தர் சக்திவேலனின் தயாரிப்பாளராகும் ஆசை தள்ளிப் போயிருக்கிறது.