இரஷ்யா செல்கிறார் விஜய்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.சுருக்கமாக தி கோட் என்று சொல்லப்படும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகிய ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு புகழ் சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2023 அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு சென்னை, தென்னாப்பிரிக்கா, ஐதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து மீண்டும் சென்னை புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடந்துவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் வெளிநாடு செல்லவிருக்கிறார்கள்.
இம்முறை அவர்கள் செல்லவிருக்கும் நாடு இரஷ்யா. அங்கு தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட சில நகரங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதற்காக, தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிர்வாகத்தினர் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்வதற்காக அங்கு சென்றிருக்கிறார்களாம்.படப்பிடிப்பு நடத்தும் இடங்கள் அதற்கான அனுமதிகள் வாங்குவது ஆகிய வேலைகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இரஷ்யாவில் சுமார் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவு பெற்று விடும் என்று சொல்கிறார்கள்.மார்ச்,ஏப்ரல் மாதங்களில் அங்கு இருக்கும் தட்பவெப்ப நிலை நம் மக்கள் சமாளித்துக் கொள்ளும் அளவில் இருக்கும் என்பதால் இப்போது அங்கு செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதேநேரம், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் விஜய் இரஷ்யாவில் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.