சினிமா செய்திகள்

வணங்கான் படத்துக்குச் சிக்கல்

தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி இரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இந்தப்படம் வெளியாகவுள்ளது.

தனுஷ் படத்தின் இந்த அறிவிப்பால் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள வணங்கான் படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வணங்கான் படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாவதால் வணங்கான் படத்தை ஜூலை 26 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம்.

இப்போது அதே தேதியில் ராயன் வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.அதனால் சொன்னபடி வணங்கான் படத்தை ஜூலை மாதத்தில் வெளியிடவியலாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

ஏதாவது பண்டிகைக் காலம் என்றால் ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது.

ஆனால் சாதாரண நாட்களில் ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வந்தால் திரையரங்குகள் கிடைப்பதிலிருந்து எல்லாவற்றிலும் நெருக்கடி ஏற்படும்.

இந்தியன் 2 படத்துக்கு முன்னதாக ஜூலை 5 ஆம் தேதியோ அல்லது அடுத்து ஜுலை 19 ஆம் தேதியோ வணங்கான் படத்தை வெளியிடலாம்.அப்படிச் செய்தால் இது ஒரு வாரம் மட்டுமே ஓடுகிற படம் என்று அவர்களே முடிவு செய்துவிட்டார்கள்,அதனால் தான் இரண்டு பெரிய படங்களுக்கு நடுவே வெளியிடுகிறார்கள் என்கிற பேச்சு வந்துவிடும்.

அவ்வாறு வந்தால், வணங்கான் படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்க்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதனால் ஜூலை வெளியீடு என்கிற அறிவிப்பைத் திரும்பப்பெற்றுக் கொண்டு வேறொரு நல்ல தேதி பார்த்து வணங்கான் படத்தை வெளியிடுவதே நல்லது என வியாபார வட்டத்தினர் சொல்கின்றனர்.

வணங்கான் குழுவினர் எண்ணம் என்னவோ?

Related Posts