சினிமா செய்திகள்

மூன்றாவதாக ஒரு நாயகன் – வியப்பூட்டும் வெற்றிப்பட இயக்குநரின் நிலை

கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.2023 ஆம் ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றான அப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். அந்தப்படத்தின் வெற்றி அப்பட நாயகன் கவினின் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது.

அப்படத்தை இயக்கிய கணேஷ்.கே.பாபுவுக்கும் உடனே அடுத்த படம் கிடைத்தது.டாடா படம் வெளியான அன்றே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவிருக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. அதன்பின் அவர் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

2011 இல் அறிவிக்கப்பட்ட படம் மாரிசெல்வராஜ் – துருவ்விக்ரம் இணையும் படம். அந்தப் படமே இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு நிலைகளைக் கடந்து அந்தப்படமே சில வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியது.

அந்தப்படத்தைத் தொடர்ந்து கணேஷ்கே.பாபு இயக்கும் படத்துக்கு துருவ் விக்ரம் வருவார். அது இந்த வருட இறுதியாகிவிடும் என்னும் நிலை.

எனவே, அதற்கு முன்பாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே ஒரு படத்தை கணேஷ் கே.பாபு இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட அந்தப்படத்தில் நாயகியாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் மகள் தவ்தி ஜிவால் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இந்தப்படமும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்றும் தெரியவில்லை.

அதனால், இப்போது இன்னொரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் கே.பாபு.அந்தப்படத்தில் நாயகனாக ஜெயம்ரவி நடிக்கவிருக்கிறார்.அப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் பிரதர். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கும் நேரத்தில் அதே நிறுவனத்துக்கு இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பிரதர் படம் மட்டுமின்றி,புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ஜெயம்ரவி.

இவை தவிர மோகன்ராஜா இயக்கத்தில் தனிஒருவன் 2 படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுதவிர ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார் என்கிற செய்தியும் வந்துகொண்டிருக்கிறது.

லைகா நிறுவனம் ஜீவா கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை விரைவில் தொடங்கவில்லை என்றால்,இயக்குநர் கணேஷ்.கே.பாபு ஜெயம்ரவி நடிக்கும் படத்தை இயக்கப் போய்விடுவார் என்கிறார்கள்.

டாடா என்கிற ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தும் அடுத்தடுத்து இரண்டு கதாநாயகர்கள் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டும் அவை நடக்கவில்லை. இப்போது மூன்றாவதாக ஒரு நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.கேட்போரை வியக்க வைக்கும் இந்தப் பயணம் எங்கே போகும்? எது முதலில் தொடங்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

Related Posts