ரணம் அறம் தவறேல் – திரைப்பட விமர்சனம்
![Ranam](https://cinemavalai.com/wp-content/uploads/2024/02/Ranam.jpg)
அசாதரணமாக நடக்கும் கொலைகள் அவை குறித்த காவல்துறை விசாரணை அதற்குத் துணையாக அமையும் நாயகன் வைபவ்வின் சிறப்புத்திறன் ஆகியனவற்றைக் கொண்டு படபடப்பாகப் பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கும் படம் ரணம் அறம் தவறேல்.
நகரின் பல பகுதிகளில் எரிந்த நிலையில் பல உடல்பாகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து அவர்கள் உருவத்தை வரையும் திறமை கொண்ட நாயகன் வைபவ்வை துணைக்கு வைத்துக் கொண்டு அவ்வழக்கை விசாரிக்கிறார் காவலதிகாரி தன்யாஹோப். விசாரணை முடிவு என்னவானது? அதன் விளைவு என்ன? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
மனைவி குழந்தையை இழந்து வாழ்க்கையை வெறுத்திருக்கும் இளைஞர் வேடத்துக்குப் பொருத்தமாகத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார் வைபவ்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் புதிதாக இருக்கிறார்.
காவலதிகாரியாக நடித்திருக்கும் தன்யாஹோப், அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். காட்சிகளுக்குப் பசையாக அவர் இருக்கிறார்.
பத்துவயதுப் பெண் குழந்தைக்கு அம்மா வேடம் என்றாலும் நேர்த்தியாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார் நந்திதாஸ்வேதா.
வைபவ்வின் காதலியாக வரும் சரஸ்மேனனுக்குக் காட்சிகள் குறைவென்றாலும் கண்களுக்கு நிறைவாக இருக்கிறார்.
சிறுமி பிரனதி, டார்லிங் மதன், சுரேஷ் சக்ரவர்த்தி,கிச்சா ரவி,ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் நன்றாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
த்ரில்லர் படம் அதுவும் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கும் படம் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை அதிகம் இருக்கும். அதை சுகமான சுமையாக ஏற்று நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அரோல்கொரோலியின் முன் அனுபவங்கள் படத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.பாடல்களும் இதமாக அமைந்திருக்கின்றன.
நாட்டில் நடக்கும் புதிய குற்றமொன்றை வெளிப்படுத்தி அதைச் சுவையான திரைக்கதை மூலம் சுவாரசியமாகக் கொடுத்து இறுதியில் ஒரு விழிப்புணர்வுச் செய்தியையும் கொடுத்து முழுமையான இயக்குநர் என்று பெயர் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஷெரிஃப்.
– இளையவன்