ரஜினி கலகல பேச்சு கமல் பாடல் – இளையராஜா 75 விழா சுவாரசியங்கள்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது.
2 ஆவது நாள் நிகழ்ச்சியாக நேற்று (பிப்ரவரி 3,2019) இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்கள். ஹங்கேரி இசைக் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.
விழாவில், கமல்,ரஜினி,விஜய் உள்ளிட்ட நடிகர்களும்,இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது…
இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75 ஆவது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.
இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.
பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவையாகவே இருக்கும்.
நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்தப் படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.
ஒரே நாளில் 3 படங்களுக்குக் கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.
டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.
மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதைப் பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.
‘பொதுவாக என் மனசு தங்கம்…’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்…’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்…’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட இளையராஜா, கமலிடம் கேட்டால் ரஜினிக்கு நான் நல்ல பாடல்களைப் போட்டுக் கொடுத்ததாகச் சொல்வார் என்றார். கமலும் அதை ஆமோதித்தார்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.
ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்துக்கொண்டிருந்தனர்.