சினிமா செய்திகள்

விஜய் பட உரிமை சன் டிவியிடமிருந்து ஜீ தமிழுக்கு போனது எப்படி? – விவரம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

செப்டெம்பர் 05 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிற இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை அந்நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை முதலில் சன் தொலைக்காட்சி வாங்குவதாக இருந்ததாம்.அவர்கள் தருவதாகச் சொன்ன விலை சுமார் ஐம்பது கோடி என்று சொல்லப்படுகிறது.

அதோடு, படத்தின் குறுமுன்னோட்டம், முன்னோட்டம் ஆகியனவற்றை ஒளிபரப்பும் உரிமையையும் கேட்டிருக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சி இப்படி நிபந்தனை விதித்ததால், இப்படத்தின் பாடல் உரிமையைப் பெற்றிருக்கும் நிறுவனத்திடமிருந்து அதை வாங்கி சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்தாக வேண்டும் எனும் சங்கடமான நிலை தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் அவர்கள் பேசிப்பார்த்திருக்கிறார்கள். அதற்கு, அப்படி அந்த உரிமையைக் கொடுப்பதாக இருந்தால் ஒப்பந்தம் போடப்பட்ட தொகையிலிருந்து சுமார் ஒன்பது கோடி குறைத்துக் கொள்வோம் என்று பாடல் உரிமை பெற்ற நிறுவனத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.இதில் தயாரிப்பு நிறுவனத்துக்கு உடன்பாடில்லை.

எனவே, சன் தொலைக்காட்சியிடம் பேசுவதை விடுத்து மற்ற தொலைக்காட்சி நிறுவனங்களை அணுகத் தொடங்கியது தயாரிப்பு நிறுவனம்.

அதன் விளைவுதான், ஜீ தமிழ் நிறுவனம் அந்த உரிமையைப் பெற்றிருக்கிறது.

இதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் தொகை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற வியாபாரங்களில், ஒப்புக் கொண்ட தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் கொடுத்துவிடுவார்கள்.ஆனால் இந்தப் படத்துக்காக ஒப்புக் கொண்ட இந்தத் தொகையை முன்று மாதங்களுக்கொரு முறை என பல தவணைகளில் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

விஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் குறைந்த தொகைக்கு வியாபாரம் பேசப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையைத் தருவதிலும் பல நிபந்தனைகள் என்பது விஜய் உட்பட படக்குழுவினர் மொத்தப் பேருக்கும் அதிர்ச்சி தரும் நிகழ்வாக அமைந்திருக்கிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் படத்துக்கே இதுதான் நிலை என்பதால் திரையுலகம் திகைத்துப் போயிருக்கிறது.

Related Posts