விமர்சனம்

டியர் – திரைப்பட விமர்சனம்

இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம்.

எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும் சிக்கல் குறட்டை. ஆண்கள் குறட்டை விட்டாலே அவமரியாதைக்கு ஆளாவார் எனும் நிலையில் பெண் குறட்டை விட்டால் என்னவெல்லாம் நிகழும்? என்பதைப் பேசியிருக்கிறது படம்.

படத்துக்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்று ஆச்சரியப்படுத்துகிறார் ஜீ.வி.பிரகாஷ்.இப்படத்தில்,
தொலைக்காட்சியில் செய்தி வாசித்துப் புகழ்பெற வேண்டும் என்று நினைக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ்.அந்த இலட்சியத்துக்கு இடையூறாக மனைவியே இருக்கிறார் என்கிற இக்கட்டை நடிப்பில் பொருத்தமாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டதே துணிச்சல்.அதில் மிகச் சரியாக நடித்து இதெல்லாம் ஒரு குறையே இல்லை என்று படம் பார்ப்போரை நினைக்க வைத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த இணையர் தவிர,ஜீவியின் அண்ணன் காளிவெங்கட் அவருடைய மனைவி நந்தினி, ஜீவியின் அப்பா தலைவாசல் விஜய் அவருடைய மனைவி ரோகிணி, ஜீவியின் மாமனார் இளவரசு அவருடைய மனைவி கீதாகைலாசம் ஆகிய மூன்று இணையர்கள் படத்தில் இருக்கிறார்கள்.

குடும்பத்துக்குள் வரும் பல்வேறு சிக்கல்களின் பரிமாணங்களை அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர். இவர்களும் தத்தம் தேர்ந்த நடிப்பின் மூலம் எளிதில் புரிய வைத்திருக்கிறார்கள்.

நகைச்சுவைக்கு அப்துல் லீ இருக்கிறார். குறை வைக்கவில்லை.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு,காட்சிகளில் குளிர் நிறைத்து, படத்தில் இருக்கும் சூட்டைக் குறைத்திருக்கிறது.

ஜீவியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பொருத்தப்பாடு.

சின்ன சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்ளும் நாயகன், பெரும் சத்தத்தில் குறட்டை விடும் நாயகி என்கிற முரணை அடிப்படையாக வைத்து பல விசயங்களைப் பேசியிருக்கிறார்.

சிற்சில தொய்வுகளைத் தாண்டி அனைவரும் பார்த்து இரசித்து விரும்புகிற படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஜீ.வி.பிரகாஷுக்கும் பெயர் சொல்லும் படம்.

– ஆநிரையன்

Related Posts