விமர்சனம்

பயமறியா பிரம்மை – திரைப்பட விமர்சனம்

சிறையில் இருக்கும் கொலைக் குற்றவாளியின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தப் புத்தகத்தை வாசிப்போர் அந்தக் கதாபாத்திரமாகவே தங்களை உணர்கிறார்கள் என்பதைக் காட்சி வடிவமாக்கும் புதிய முயற்சியில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் பயமறியா பிரம்மை.

உயிரைப் பறித்திருக்கிறோம் என்கிற குற்றவுணர்வு இல்லாமல் கொலை ஒரு கலை என்று பேசும் கதாபாத்திரத்தின் மீது கோபம் வரவேண்டும்,ஆனால் அதில் நடித்திருக்கும் குருசோமசுந்தரம் அதை இரசிக்க வைத்திருக்கிறார்.

எழுத்தாளராக நடித்திருக்கும் வினோத்சாகர் இடம்மாறி அமர்ந்திருக்கிறார்.இதிலும் தான் குறைந்தவனில்லை என்று காட்டியிருக்கிறார்.

முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேடி, நன்றாக மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

சாய் பிரியங்கா ரூத்,ஜான் விஜய்,விஸ்வந்த், ஹரீஷ் உத்தமன், திவ்யா கணேஷ் ஆகிய அனைவருமே தத்தம் வேடத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பது படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது.

நந்தா, பிரவீன் ஆகியோரின் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வுகளைச் சரியாகக் கடத்தக் கூடியதாக இருக்கிறது.

கே வின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை இயல்பாக இசைந்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் இராகுல் கபாலி.ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அதில் இருக்கும் ஒருவர் வாழ்க்கையை ஆறு பேர் வாழ்வதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.அவற்றில் மன உணர்வுகளுக்கு வயது பேதம், பால் பேதம் இல்லை என்பதைச் சொல்லியிருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் தொய்வுகள் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்துவதுடன் இயக்குநரின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

கதைக்கேற்ற நடிகர்களைத் தேர்வு செய்வதில் தெளிவு,ஒரு விசயத்தை நேரடியாகச் சொல்வதைவிடக் குறியீடுகளால் உணர்த்த முற்படும் இயக்குநர்கள் வரிசையில் சேரக்கூடியவராக வந்திருக்கிறார்.

– சுகந்தன்

Related Posts