September 18, 2020
சினிமா செய்திகள்

மாஸ்டர் படம் குறித்த தவறான தகவலும் விளக்கமும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இல்லையென்றால் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகி இருக்கும்.இப்போது, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் படக்குழு அத்தகவலை உறுதியாக மறுத்துவிட்டது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் மாத வெளியீடு என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் தேதி வாரியாக வெளியாகும் படங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியீடாக ‘மாஸ்டர்’ பெயர் இடம்பெற்றது. இதனால் ‘மாஸ்டர்’ நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது எனத் தகவல் பரவியது.

இது தொடர்பாக ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது, “இன்னும் ‘மாஸ்டர்’ படத்தின் ஃபைனல் அவுட்டை எடுக்கவே இல்லை. படம் கண்டிப்பாகத் திரையரங்குகளில்தான் வெளியாகும். அதில் மாற்றுக் கருத்தில்லை. கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 9 ஆம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகியிருக்கும்.

அந்தத் தேதியில் வெளியாகியிருந்தால், அமேசான் ஓடிடியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியீடு என்று முடிவு செய்திருப்பார்கள்.அந்தத் தேதியைத் தவறாக இப்போது வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதன்மூலம் மீண்டும் மாஸ்டர் படம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளாது.

Related Posts